கடலூரில் ஓடும் ரெயிலில் பெண் வக்கீல் திடீர் சாவு; ராமேசுவரத்துக்கு குடும்பத்துடன் செல்லும் வழியில் நேர்ந்த சோகம் !
கடலூரில் ராமேசுவரத்துக்கு குடும்பத்துடன் ரெயிலில் பயணம் செய்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு பெண் வக்கீல் உயிரிழந்தார்.
ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், கண்ணவரம் பகுதியை சேர்ந்தவர் விமல்குமார் (வயது 50). இவருடைய மனைவி பாக்கியலட்சுமி(47). இருவரும் வக்கீல்கள் ஆவார்கள். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில், இவர்கள் குடும்பத்தோடு ராமேசுவரம் சென்று வழிபட முடிவு செய்தனர். இதற்காக சென்னை வந்த அவர்கள், அங்கிருந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வழியாக ராமேசுவரம் செல்லும் ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று முன்தினம் மாலையில் ஏறி பயணம் மேற்கொண்டனர்.
கடலூரில் ரெயில் நிறுத்தம்
ரெயில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வந்தபோது பாக்கியலட்சுமிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே இதுபற்றி விமல்குமார், ரெயிலில் உள்ள டிக்கெட் பரிசோதகரிடம் தொிவித்தார்.
பின்னர், நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டது. வழக்கமாக திருப்பாதிரிப்புலியூரில் இந்த ரெயில் நின்று செல்வது இல்லை. ஆனால், பாக்கியலட்சுமிக்கு ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக, அவருக்கு சிகிச்சைக்கு உதவும் வகையில் ரெயில் நிறுத்தப்பட்டது.
சாவு
இதையடுத்து, ரெயிலில் இருந்து இறங்கியவுடன், அங்கிருந்த ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு பாக்கியலட்சுமியை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த கடலூர் முதுநகர் ரெயில்வே இருப்பு பாதை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட போலீஸ் விசாரணையில் பாக்கியலட்சுமி மாரடைப்பால் இருந்திருக்க கூடும் என தெரிகிறது.
இந்த சம்பவம், ரெயிலில் பயணம் செய்த சக பயணிகளிடம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.