பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு:சி.பி.சி.ஐ.டி. முன்னாள் இன்ஸ்பெக்டரிடம் மீண்டும் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிவிழுப்புரம் கோர்ட்டு உத்தரவு
பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் சி.பி.சி.ஐ.டி. முன்னாள் இன்ஸ்பெக்டரிடம் மீண்டும் குறுக்கு விசாரணை செய்ய விழுப்புரம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 68 சாட்சிகளின் விசாரணை கடந்த மாதம் 13-ந் தேதியன்று நிறைவடைந்தது. இவ்வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பில் இனி விசாரிக்க சாட்சிகள் யாரும் இல்லை என்று மனுதாக்கல் செய்த நிலையில், தன்னை ஒரு சாட்சியாக ஏற்றுக்கொண்டு விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
அதன்படி கடந்த 25-ந் தேதியன்று செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு சாட்சியாக நீதிபதி முன்னிலையில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வக்கீலும், அரசு தரப்பு வக்கீலும் குறுக்கு விசாரணை செய்தனர்.
இதனை தொடர்ந்து நேற்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆஜரானார். முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ஆஜராகவில்லை. அவர் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்யப்பட்டது. மேலும், அரசு தரப்பின் 62-வது சாட்சியான சி.பி.சி.ஐ.டி. முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டரும் தற்போது கடலூர் லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவருமான சுந்தர்ராஜனிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு மீண்டும் குறுக்கு விசாரணை செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளதாக கூறி அந்த உத்தரவு நகலை தாக்கல் செய்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி புஷ்பராணி, இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜனிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு குறுக்கு விசாரணை செய்வதற்காக இவ்வழக்கின் விசாரணையை வருகிற 9-ந் தேதிக்கு (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைத்ததோடு அன்றைய தினம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகிய இருவரும் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.