நடுவானில் பெண் பயணிக்கு திடீர் நெஞ்சுவலி: மலேசிய விமானம் சென்னையில் அவசரமாக தரை இறங்கியது
சவுதிஅரேபியாவில் இருந்து கோலாலம்பூர் சென்ற விமானம் நடுவானில் பறந்து சென்றபோது பெண் பயணிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரை இறக்கப்பட்டது.
மீனம்பாக்கம்,
சவுதி அரேபியா ஜெட்டா நகரில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு 378 பயணிகளுடன் விமானம் சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் மலேசிய நாட்டைச் சேர்ந்த ஜமீலா பிந்தி (வயது 58) என்ற பெண், தனது குடும்பத்தினருடன் பயணித்துக்கொண்டிருந்தார்.
விமானம் நடுவானில் பறந்தபோது பெண் பயணி ஜமீலா பிந்திக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு வலியால் துடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், விமான பணிப்பெண்களிடம் தகவல் தெரிவித்தனர். உடனடியாக ஜமீலா பிந்திக்கு விமானத்துக்குள் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அவசரமாக தரை இறங்கியது
உடனடியாக ஏதாவது ஒரு விமான நிலையத்தில் விமானத்தை தரை இறக்க விமானி முடிவு செய்தார். அப்போது அந்த விமானம், சென்னை வான் எல்லையில் பறந்து சென்று கொண்டு இருந்தது. உடனே சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு மருத்துவ சிகிச்சைக்காக விமானத்தை அவசரமாக தரை இறக்க விமானி அனுமதி கேட்டார்.
இதையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், டெல்லி தலைமை கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டனர். பின்னர் விமானத்தை சென்னையில் தரையிறங்க அனுமதிப்பதோடு, அந்த பயணிக்கு மருத்துவ சிகிச்சைக்கும் தேவையான ஏற்பாடுகள் செய்யும்படி உத்தரவிட்டனர்.
அதன்பிறகு அந்த விமானம் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்கியது.
ஆஸ்பத்திரியில் அனுமதி
சென்னை விமான நிலையத்தில் தயாராக இருந்த மருத்துவ குழுவினர் விமானத்துக்குள் ஏறி பயணியை பரிசோதித்தனர். அவரை ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருந்தது.
உடனே சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் ஜமீலா பிந்தி மற்றும் அவருடன் வந்த 2 பேருக்கு அவசரகால மருத்துவ விசா வழங்கினர். அதன்பின்பு 3 பேரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டனர். பின்னர் சென்னை விமான நிலையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஜமீலா பிந்தி சேர்க்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து 375 பயணிகளுடன் அந்த விமானம் கோலாலம்பூருக்கு புறப்பட்டு சென்றது. இதனால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.