பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை
குன்னூரில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சப்-இன்ஸ்பெக்டரை போலீசார் கைது செய்தனர்.
குன்னூர்,
குன்னூரில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சப்-இன்ஸ்பெக்டரை போலீசார் கைது செய்தனர்.
பாலியல் தொல்லை
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள அப்பர் குன்னூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக சரவணன் (வயது 50) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் திருமணமாகி விவாகரத்து பெற்ற பெண் போலீஸ் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணை ஏமாற்றி உள்ளார். இதுகுறித்து பெண் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இதைதொடர்ந்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மஞ்சூர் போலீஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
சப்-இன்ஸ்பெக்டர் கைது
ஆனால், இந்த நடவடிக்கை தனக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும், மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெண் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் பெண் போலீசை திருமணம் செய்வதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்த சரவணன் மீது 6 பிரிவுகளின் கீழ் அப்பர் குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை கைது செய்தனர். அவர் மீது பாலியல் புகாரை தொடர்ந்து துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. போலீஸ் நிலையத்தில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.