மொபட்டில் இருந்து கீழே விழுந்த அஞ்சலக பெண் அதிகாரி பலி
வந்தவாசியில் மொபட்டில் இருந்து கீழே விழுந்த அஞ்சலக பெண் அதிகாரி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கொட்டை கிராமத்தை சேர்ந்தவர் பாலச்சந்தர், அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி ரேவதி (வயது 42), மழையூர் துணை அஞ்சலகத்தில் அலுவலராக பணிபுரிந்து வந்தார். இவர், தினமும் மொபட்டில் அலுவலகத்திற்கு சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் ரேவதி அலுவலகத்தில் பணியை முடித்துவிட்டு மொபட்டில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
வந்தவாசி-சேத்பட் சாலையில், பொன்னூர் மலை அருகே வீடு திரும்பும் போது சாலையின் குறுக்கே கூட்டமாக வந்த காட்டு பன்றிகள் மீது மொபட் மோதியதில் ரேவதி நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் படுகாயம் அடைந்த ரேவதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொன்னூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.