பெண் தூக்குப்போட்டு தற்கொலை; உறவினர்கள் சாலை மறியல்


பெண் தூக்குப்போட்டு தற்கொலை; உறவினர்கள் சாலை மறியல்
x

கீரமங்கலம் அருகே சாவுக்கு காரணம் போலீசார் என கூறி கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர், தி.மு.க. பிரமுகர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புதுக்கோட்டை

கீரமங்கலம்:

பாதை பிரச்சினை

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே மேற்பனைக்காடு வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் நீலகண்டன், இவரது மனைவி கோகிலா (வயது 35). இவருக்கும், பக்கத்தில் வீட்டை சேர்ந்த கண்ணையா என்பவருக்கும் வீட்டு பாதை தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில் கண்ணையா பாதையை அடைத்துள்ளார். இதுகுறித்து இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கண்ணையா கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் கோகிலாவை கைது செய்தனர். இதையடுத்து அவர் நிபந்தனை ஜாமீன் பெற்று தினசரி போலீஸ் நிலையத்திற்கு சென்று கையெழுத்திட்டு வந்துள்ளார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்நிலையில், நேற்று அதிகாலை கோகிலா அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்ட இடம் அருகே ஒரு கடிதம் ஒன்று இருந்துள்ளது. அந்த கடிதத்தில் எனது சாவிற்கு காரணம் மேற்பனைக்காடு வடக்கு தி.மு.க. பிரமுகர் எம்.எம்.குமார், அவரது மனைவியும் போலீசுமான புவனேஸ்வரி மற்றும் என்னை வலுக்கட்டாயமாக போலீஸ் நிலையம் இழுத்து சென்று சிறைக்கு அனுப்ப காரணமாக இருந்த கீரமங்கலம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், பெண் போலீஸ் கிரேசி ஆகியோர் தான் என்று எழுதி இருந்தது.

சாலை மறியல்

கோகிலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்து அவரது உறவினர்கள் அங்கு திரண்டு வந்தனர். தொடர்ந்து மேற்பனைக்காடு வடக்கு கிராமத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து கீரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது அவர்களிடம் கோகிலா எழுதிய கடிதத்தில் கூறியுள்ள நபர்களை கைது செய்ய வேண்டும். மேலும் அடைக்கப்பட்ட வீட்டு பாதையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கோகிலாவின் உறவினர்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், போலீசார் கோகிலா வீட்டிற்கு சென்றனர். அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த கோகிலா உடலை மீட்க முயன்றனர். அப்போது அவர்களை கோகிலா உறவினர்கள் தடுத்தனர்.

இதற்கிடையே ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தீபக் ரஜினி, கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், அறந்தாங்கி தாசில்தார் பாலகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை நடத்திய பிறகு உடனடியாக பிரச்சினைக்குரிய வீட்டு பாதை அகற்றப்பட்டது. மேலும் அதிகாரிகள் பெண் சாவு குறித்து புகார் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்றனர்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதையடுத்து கோகிலாவின் கணவர் நீலகண்டன் புகார் கொடுத்தார். அதில், கடந்த மாதம் 20-ந் தேதி அதிகாலை எனது மனைவியை கீரமங்கலம் போலீசார் வலுக்கட்டாயமாக போலீஸ் நிலையம் இழுத்துச் சென்றனர். இதனால் மனஉளைச்சலில் இருந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவத்தில் என் மனைவி மீது வழக்குப்பதிவு செய்ய தூண்டிய எம்.எம்.குமார், புவனேஸ்வரி, கீரமங்கலம் கை.காமராஜ், நெய்வத்தளி துரைமாணிக்கம் ஆகிய 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கூறினர். இதற்கிடையே போலீசார் ேகாகிலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் நிலையம் முற்றுகை

இந்த நிலையில் நேற்று மதியம் பா.ஜ.க. மாவட்ட தலைவர் செல்வம் அழகப்பன் தலைமையில் பா.ஜ.க.வினர் மற்றும் கோகிலாவின் உறவினர்கள், அ.தி.மு.க. வினர், நாம் தமிழர் கட்சியினர் உள்பட பல்வேறு கட்சியினரும் கீரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உடனே கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு வந்த புதுக்கோட்டை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்கிருஷ்ணன், ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பிறகு மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதுதொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், தி.மு.க. பிரமுகர் குமார் உள்பட 6 பேர் மீது ேபாலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதுக்கோட்டை கோட்டாட்சியர் விசாரணை நடத்த உள்ளார்.


Next Story