கள்ளத்தொடர்பை மகன்கள் கண்டித்ததால் கள்ளக்காதலனுடன் பெண் தற்கொலை கடலூரில் பரபரப்பு
கள்ளத்தொடர்பை மகன்கள் கண்டித்ததால் கள்ளக்காதலனுடன் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்காதல்
நெல்லிக்குப்பம் அருகே உள்ள பல்லவராயநத்தத்தை சேர்ந்தவர் சேகர் மனைவி வனிதா (வயது 40). இவர் பாலூரில் உள்ள வேளாண்மை விதை ஆராய்ச்சி பண்ணையில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு செந்தில், அஜித்பிரகாஷ், அருள் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இதில் செந்தில் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். சேகர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் வனிதா தனது 2 மகன்களுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் வனிதாவுக்கும், ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த பில்லாலிதொட்டியை சேர்ந்த பெயிண்டர் ராமதாஸ் (47) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
தாயை கண்டித்த மகன்கள்
திருமண வயதில் 2 மகன்கள் இருப்பதை மறந்து வனிதா, கள்ளக்காதலனுடன் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றித்திரிந்ததாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த அவரது உறவினர்கள் வனிதாவை கண்டித்துள்ளனர். இதனால் அவர் 2 மகன்களையும் தவிக்க விட்டுவிட்டு, கள்ளக்காதலனுடன் கடலூர் கூத்தப்பாக்கத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வனிதா, பல்லவராயநத்தத்தில் உள்ள மகன்களை பார்க்க சென்றதாக தெரிகிறது. அப்போது அவரது மகன்கள், வனிதாவிடம் திருமண வயதில் நாங்கள் இருக்கும் போது ஏன் இப்படி கள்ளக்காதலனுடன் சுற்றித்திரிகிறீர்கள் என்று கேட்டு கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த வனிதா, கூத்தப்பாக்கத்திற்கு வந்துள்ளார்.
தற்கொலை
பின்னர் அவர் நடந்த சம்பவத்தை ராமதாசிடம் கூறியதும், இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். அதன்படி நள்ளிரவு நேரத்தில் வனிதாவும், ராமதாசும் மின்விசிறியில் ஒரே சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுபற்றி அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தற்கொலை செய்து கொண்ட 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி, அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் அவர்களது உடல்களை பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதலை மகன்கள் கண்டித்ததால், கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.