மல்லூரில்மொபட் மீது கார் மோதி பெண் பலி
பனமரத்துப்பட்டி
சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள வாழக்குட்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி சாந்தி (வயது 50). இவர்கள் இருவரும் நேற்று மதியம் மொபட்டில் சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றனர். அங்கு பரிசோதனைக்கு பின்னர் மாலை 5 மணி அளவில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மல்லூர் பிரிவு பைபாசில் சாலையை கடக்க முயன்றபோது சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு கார் ராஜேந்திரனின் மொபட் மீது மோதியது.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சாந்தி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த ராஜேந்திரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.