இரும்பு கம்பியால் அடித்து பெண் படுகொலை
பொது கிணற்றில் தண்ணீர் எடுப்பதில் ஏற்பட்ட பிரச்சினையில் பெண்ணை இரும்பு கம்பியால் அடித்து படுகொலை செய்த உறவினர் கிருஷ்ணகிரி கோர்ட்டில் சரண் அடைந்தார்.
மத்தூர்
பொது கிணற்றில் தண்ணீர் எடுப்பதில் ஏற்பட்ட பிரச்சினையில் பெண்ணை இரும்பு கம்பியால் அடித்து படுகொலை செய்த உறவினர் கிருஷ்ணகிரி கோர்ட்டில் சரண் அடைந்தார்.
தண்ணீர் எடுப்பதில் தகராறு
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா குள்ளம்பட்டி அருகே உள்ள சந்தம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி மாதம்மாள் (வயது 50). விவசாயி. இவர்களுக்கு கீதா, மஞ்சு என்று 2 மகள்கள் உள்ளனர். கோவிந்தசாமி ஏற்கனவே இறந்து விட்டார்.
இந்த நிலையில் மாதம்மாளுக்கும், அவரது கணவரின் சகோதரர் சரவணனுக்கும் இடையே பொது கிணற்றில் தண்ணீர் எடுப்பது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இந்த கிணற்றுக்கான எலக்ட்ரிக் மோட்டாரின் பியூஸ் கேரியரை மாதம்மாள் எடுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சரவணன் மற்றும் அவரது மனைவி செந்தாமரை ஆகியோர் நேற்று முன்தினம் மாதம்மாளிடம் கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
அடித்துக்கொலை
இந்த நிலையில் கந்திகுப்பம் அருகே உள்ள கொல்ரூரை சேர்ந்த செந்தாமரையின் சகோதரர் ரமேஷ் (35) என்பவர் அங்கு வந்தார். அவர் மாதம்மாளிடம் பியூஸ் கேரியரை எப்படி நீ எடுக்கலாம் எனக் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ரமேஷ் இரும்பு கம்பியால் மாதம்மாளின் தலையில் ஓங்கி அடித்தார்.
இதில் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு மாதம்மாள் பரிதாபமாக இறந்தார்.
ேகாா்ட்டில் சரண்
இதுதொடர்பாக மாதம்மாளின் மகள் மஞ்சு மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து ரமேசை வலைவீசி தேடி வந்தார். இந்தநிலையில் ரமேஷ் கிருஷ்ணகிரி ஜே.எம்.-2 கோர்ட்டில் சரண் அடைந்தார். இதையடுத்து அவரை போலீசார் தர்மபுரி சிறையில் அடைத்தனர்.
மத்தூர் அருகே பொது கிணற்றில் தண்ணீர் எடுப்பது தொடர்பான பிரச்சினையில் பெண் இரும்பு கம்பியால் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.