பெண் வெட்டிக்கொலை
பனமரத்துப்பட்டி:-
சேலம் அருகே பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். வீட்டுக்குள் அழுகிய நிலையில் உடல் மீட்கப்பட்டது.
வீட்டுக்குள் துர்நாற்றம்
சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே சின்ன சீரகாபாடி கிராமம் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் காளியம்மாள் என்ற லட்சுமி (வயது 47). இவர், முதல் கணவரை விவகாரத்து செய்து விட்டு மேட்டூரை சேர்ந்த ரகு என்பவரை 2-வதாக திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். அவர்கள் திருமணம் ஆகிய வெளியூர்களில் வசித்து வருகின்றனர்.
இதற்கிடையே நேற்று மாலையில் லட்சுமி வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. அவரது வீடு திறந்து கிடந்தது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் ஆட்டையாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
வெட்டிக்கொலை
தகவல் அறிந்த ஆட்டையாம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். லட்சுமியின் உடல் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசியது. அவரது தலை, வயிறு உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயம் இருந்தது. குடல் சரிந்த நிலையில் காணப்பட்டது. தலைமுடி வெட்டி ஆங்காங்கே வீசப்பட்டு இருந்தது. ரத்தம் உறைந்த நிலையில் காணப்பட்டது.
உடனே போலீசார் லட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை கொடூரமாக வெட்டி கொலை செய்தவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை.
போலீஸ் சூப்பிண்டு விசாரணை
சம்பவ இடத்துக்கு சேலம் போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு அமலஅட்வின் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். அப்போது லட்சுமியை கொடூரமாக கொலை செய்தவர்கள் யாராக இருக்கலாம் என போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.
நேற்று அதிகாலையில் 4 பேர் லட்சுமி வீட்டின் அருகில் நடமாடியதாக அக்கம் பக்கத்தினர் போலீசாரிடம் தெரிவித்தனர். ஆனால் லட்சுமி உடல் துர்நாற்றம் வீசுவதால் கொலை செய்யப்பட்டு ஓரிரு நாட்கள் ஆகி இருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
2-வது கணவருக்கு வலைவீச்சு
இதற்கிடையே லட்சுமியின் 2-வது கணவர் ரகு எங்கு இருக்கிறார் என்ற விவரம் தெரியவில்லை. அவர் தலைமறைவானதாக கூறப்படுகிறது. எனவே அவருக்கும், லட்சுமி கொலைக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.இருந்தாலும் லட்சுமி கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கலாமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.