தேனி அருகே மீட்கப்பட்ட அரசு நிலத்தில் வேலி அமைக்கும் பணி தொடக்கம்; எதிர்ப்பு தெரிவித்த 10 பேர் கைது


தேனி அருகே மீட்கப்பட்ட அரசு நிலத்தில் வேலி அமைக்கும் பணி தொடக்கம்; எதிர்ப்பு தெரிவித்த 10 பேர் கைது
x
தினத்தந்தி 30 March 2023 2:15 AM IST (Updated: 30 March 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே அரசு நிலத்தில் வேலி அமைக்கும் பணிகள் தொடங்கின. எதிர்ப்பு தெரிவித்த 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

தேனி அருகே அரசு நிலத்தில் வேலி அமைக்கும் பணிகள் தொடங்கின. எதிர்ப்பு தெரிவித்த 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரசு நிலம் மீட்பு

தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு நிலங்களை சிலர் அதிகாரிகள் துணையுடன் அபகரித்ததாக புகார்கள் எழுந்தன. அதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், பெரியகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட வடவீரநாயக்கன்பட்டியில் 109 ஏக்கர், தாமரைக்குளத்தில் 60 ஏக்கர், கெங்குவார்பட்டியில் 13 ஏக்கர் என மொத்தம் 182 ஏக்கர் அரசு நிலங்கள் அரசு அதிகாரிகளின் துணையுடன் அபகரிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே அபகரிக்கப்பட்ட நிலங்களுக்கு வழங்கிய பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டு, நிலங்கள் மீட்கப்பட்டன. அவற்றை மீண்டும் அரசு நிலங்களாக மாற்றி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

மீண்டும் எதிர்ப்பு

அரசு நிலத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மீட்கப்பட்ட நிலங்களை சுற்றி வேலி அமைக்க வருவாய்த்துறையினர் முடிவு செய்தனர். அதற்காக வடவீரநாயக்கன்பட்டி வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட, தேனி ஆயுதப்படை வளாகத்தில் இருந்து வடபுதுப்பட்டி செல்லும் சாலையோரம் உள்ள இடத்தை சுற்றி வேலி அமைக்கும் பணிகள் நேற்று முன்தினம் தொடங்கின.

வருவாய்த்துறை அதிகாரிகள் வேலி அமைக்க முயற்சி செய்த போது, அப்பகுதியில் நிலம் வாங்கி பாதிக்கப்பட்ட சிலர் அங்கு வந்து வேலி அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தற்காலிகமாக வேலி அமைக்கும் பணியை ஒத்தி வைத்தனர்.

இந்தநிலையில் பெரியகுளம் ஆர்.டி.ஓ. சிந்து தலைமையில், தாசில்தார் காதர்ஷெரீப் மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று மீண்டும் வேலி அமைக்க வந்தனர். பாதுகாப்பு பணிக்காக போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். நேற்று மீண்டும் சிலர் அங்கு வந்து வேலி அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

10 பேர் கைது

அப்போது எதிர்ப்பு தெரிவித்து வேலி அமைக்க விடாமல் தடுத்த 4 பெண்கள் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அன்னஞ்சி விலக்கு பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். அதன்பிறகு போலீஸ் பாதுகாப்புடன் வேலி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் குழிகள் தோண்டி கற்கள் பதிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியில் 2.81 ஏக்கர் பரப்பளவில் அரசு நிலத்தில் வேலி அமைக்கப்படவுள்ளதாக வருவாய் துறையினர் தெரிவித்தனர்.

இதற்கிடையே கைது செய்யப்பட்டவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story