படகுபோக்குவரத்து 2 மணி நேரம் தாமதம்
படகுபோக்குவரத்து 2 மணி நேரம் தாமதம்
சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இவர்கள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்துவிட்டு திரும்புவது வழக்கம். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.
நேற்று காலையில் விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல படகு துறையில் ஏராளமானோர் குவிந்தனர். ஆனால் காலையில் கடல் நீர்மட்டம் தாழ்வு ஏற்பட்டது. இதனால் 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கவில்லை. படகு துறையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். காலை 10 மணிக்கு கடல் நீர்மட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியது. இதையடுத்து 2 மணி நேரம் தாமதமாக படகு போக்குவரத்து நடந்தது. தொடர்ந்து சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்த்துவிட்டு திரும்பினர்.