விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சேவை பாதியில் நிறுத்தம்


விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சேவை பாதியில் நிறுத்தம்
x
தினத்தந்தி 10 July 2023 12:15 AM IST (Updated: 10 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

கடல் சீற்றம்

குமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக கடல் சீற்றமாக இருந்து வருகிறது. இதனால் குளச்சல், தேங்காப்பட்டணம், தூத்தூர் பகுதிகளை சேர்ந்த வள்ளம், கட்டுமர மீனவர்களும், சின்னமுட்டத்தை சேர்ந்த விசைப்படகு, வள்ளம், கட்டுமர மீனவர்களும் சில நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை.

அதன் பிறகு கடந்த 7-ந் தேதி முதல் மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.

படகு சேவை நிறுத்தம்

அதே சமயத்தில் கன்னியாகுமரில் கடல் சீற்றம் காரணமாக கடலின் நடுவில் உள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தாமதமாக இயக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் விடுமுறை நாளான நேற்று கன்னியாகுமரியை சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அதிகாலையில் கடற்கரையில் திரண்டு சூரிய உதயத்தை பார்த்து ரசித்தனர். பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை பார்ப்பதற்காக படகுத்துறையில் காத்திருந்தனர். அதன்படி காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்த்து ரசித்தனர்.

இந்தநிலையில் காலை 10 மணிக்கு திடீரென சூறைக்காற்று வீசியது. இதனால் ராட்சத அலைகள் எழுந்து ஆக்ரோஷத்துடன் கரைகளில் உள்ள பாறைகளில் மோதி சிதறியது. இதையடுத்து கடல் சீற்றம் காரணமாக படகு போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது.

சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

இதுதொடர்பாக அறிவிப்பு பதாகை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நுழைவாயில் பகுதியில் வைக்கப்பட்டது. இதனால் படகில் செல்ல ஆர்வத்துடன் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மாலை 4 மணி வரை கடல் இயல்பு நிலைக்கு திரும்பவில்ைல.

இதேபோல் கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு இயக்கப்படும் உல்லாச படகும் கடல் சீற்றம் காரணமாக நாள் முழுவதும் ரத்து செய்யப்பட்டது.


Next Story