மனைவி, 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு உரக்கடைக்காரர் தற்கொலை


மனைவி, 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு உரக்கடைக்காரர் தற்கொலை
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 24 Nov 2022 6:45 PM GMT)

சிதம்பரத்தில் ரூ.80 லட்சம் கடன் தொல்லையால் மனைவி, 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு உரக்கடைக்காரர் தற்கொலை செய்து கொண்டார். தனது சாவுக்கு காரணமானவர்களை விடாதீர்கள் என்று ‘வாட்ஸ்-அப்’பில் அவர் ஆடியோ ஒன்றையும் வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர்

சிதம்பரம்,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள புதுச்சத்திரம் அடுத்த வாண்டையாம்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் மகன் கணேஷ் (வயது 45). இவர் சிதம்பரம் பொய்யாபிள்ளைசாவடி பைபாஸ் அருகே உரம் மற்றும் பூச்சி மருந்துகடை வைத்து நடத்தி வந்தார்.

இவரது மனைவி பிரபாவதி(32). இவர்களுக்கு சங்கமித்ரா(11) என்கிற மகளும், குருசரண்(9) என்கிற மகனும் உள்ளனர். இவர்கள் தற்போது சிதம்பரம் தாயம்மாள் நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர்.

கணேசுக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு, கடன் தொகையும் அதிகரித்து விட்டது. இதனால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவர் தவித்து வந்தார்.

ழச்சாறில் விஷம் கலந்து கொடுத்தார்

இந்த நிலையில், அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தான் இறந்தால் தனது மனைவி, குழந்தைகள் என்ன ஆவார்கள் என்று கருதிய அவர், கனத்த இதயத்துடன் அவர்களுக்கும் விஷத்தை கொடுத்து கொன்று விடுவது என்கிற முடிவுக்கு சென்றார்.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு திராட்சை பழச்சாறில் எலி பேஸ்ட் விஷத்தை கலந்து கொடுத்தார். தந்தை தருவது பழச்சாறு தான் என்று கருதி அவரது குழந்தைகளும், அவரது மனைவி பிரபாவதியும் குடித்தனர். இதன் பின்னர் கணேசும் பழச்சாறை குடித்தார்.

நண்பருக்கு ஆடியோ பதிவு

சிறிது நேரத்தில் குழந்தைகள் மற்றும் அவரது மனைவி வாந்தி எடுத்துக்கொண்டு இருந்தனர். இதை பார்த்து, மனம்தாங்க முடியாத அவர், அங்கிருந்து வேகமாக புதுச்சத்திரம் அருகே உள்ள அன்னப்பன்பேட்டை கிராமத்திற்கு வந்தார்.அப்போது, இவரது நண்பரான பி.முட்லூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே உரக்கடை வைத்துள்ள அக்பர் அலி என்பவருக்கு, வாட்ஸ்-அப் மூலம் ஆடியோ பதிவு ஒன்றை அனுப்பி வைத்துவிட்டு, கணேஷ் அங்கிருந்த முந்திரி மரத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ரூ.80 லட்சம் கடன்

இதற்கிடையே கணேஷ் அனுப்பிய ஆடியோவை கேட்ட அக்பர் அலி அதிர்ச்சியில் உறைந்துபோனார். அந்த ஆடியோவில் கணேஷ் பேசியதாவது:-

பாய் என்னை மன்னித்துவிடுங்கள், என்னால் முடியவில்லை. 80 லட்சம் ரூபாய் வரைக்கும் கடன் வந்துவிட்டது. நான் சாக போகிறேன். எனது பிள்ளைகளுக்கும், மனைவிக்கும் எலிமருந்து கொடுத்துவிட்டேன். அவர்கள் வீட்டில் வாந்தி எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். என்னால் அதை பார்க்க முடியவில்லை. அதனால், நான் அன்னப்பன்பேட்டைக்கு வந்து தூக்குபோட்டுக்கொண்டேன். எல்லோருக்கும் உதவி செய்தும், இரக்கப்பட்டதன் காரணமாக தான் இப்படியொரு நிலைக்கு ஆளாகிவிட்டேன். நிறைய போ் கடன் வாங்கி என்னை ஏமாற்றிவிட்டார்கள்.

விட்டுவிடாதீர்கள்

எனது சாவுக்கு காரணம், சிவாயம் ஊராட்சி மன்ற தலைவர் செங்குட்டுவன் (அ.தி.மு.க.), தச்சம்பாளையம் கிராமத்தில் வசித்து வரக்கூடிய டி.எம்.ஆர்.சகோதரர்கள் 5 பேர் மற்றும் நாயுடு மங்கலத்தை சேர்ந்த புஷ்பராஜ் ஆகியோர் தான். அவர்களை விட்டுவிடாதீர்கள். எனது குழந்தைகள், மனைவியை முடிந்தால் காப்பாற்றுங்கள் பாய். கம்பெனிக்காரர்கள் பணம் கேட்டு வந்தால் அவர்களை பேசி அனுப்பிவிடுங்கள். மருந்து வினியோகஸ்தர்களும் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள், கடனுக்காகதான் எனது உயிரை நான் விடுகிறேன். எல்லோரும் என்னை மன்னித்து ஏற்றுக்கொள்ளுங்கள்.

இவ்வாறு அதில் பேசி இருந்தார்.

3 பேருக்கு தீவிர சிகிச்சை

இது குறித்து அக்பர் அலி, உடனடியாக கணேசின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் பிரபாவதியின் தங்கை கணவரான அருண் என்பவர் கணேசின் வீட்டுக்கு விரைந்து சென்றார். அங்கு கவலைக்கிடமான நிலையில் கிடந்த 2 குழந்தைகள் மற்றும் பிரபாவதி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கும், அங்கிருந்து, சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே, கணேசையும் அவர்களது உறவினர்கள் தேடி சென்றனர். அப்போது, அன்னப்பன்பேட்டை அருகே ஒரு முந்திரி மரத்தில் கணேஷ் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கிடந்தார்.

தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கணேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சட்டை பையில் கடிதம்

அப்போது கணேசின் சட்டை பையில், கடிதம் ஒன்றும் இருந்தது. அதை போலீசார் கைப்பற்றி பார்த்தனர். அதில், தனது சாவுக்கு காரணம் சிவாயம் ஊராட்சி மன்ற தலைவர் செங்குட்டுவன் மற்றும் தச்சம்பாளையத்தை சேர்ந்த டி.எம்.ஆர். சகோதரர்கள் கிருஷ்ணமூர்த்தி, முருகன், ராஜா, கண்ணன், விஜயராகவன், நடராஜன் (பா.ஜ.க.) மற்றும் நாயுடு மங்கலத்தை சேர்ந்த புஷ்பராஜ் என்றும், தனக்கு பணம் தர வேண்டியவர்கள் விவரம் பற்றியும் குறிப்பிட்டு இருந்தார்.

அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story