1,295 டன் உரங்கள் கிருஷ்ணகிரிக்கு வந்தன


1,295 டன் உரங்கள் கிருஷ்ணகிரிக்கு வந்தன
x
தினத்தந்தி 2 Oct 2022 12:15 AM IST (Updated: 2 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு நடப்பு பருவத்திற்கு தேவையான 1,295 மெட்ரிக் டன் உரங்கள் வந்துள்ளதாக வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு நடப்பு பருவத்திற்கு தேவையான 1,295 மெட்ரிக் டன் உரங்கள் வந்துள்ளதாக வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உரங்கள் இருப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 23 ஆயிரம் ஹெக்டேர் நெல், 50 ஆயிரம் ஹெக்டேர் சிறுதானியங்கள், 58 ஆயிரம் ஹெக்டேர் பயிறு வகைகள், 18 ஆயிரம் ஹெக்டேர் எண்ணெய் வித்து பயிர்கள், 2 ஆயிரம் ஹெக்டேர் பருத்தி, 600 ஹெக்டேர் கரும்பு, மலர்கள், காய்கறிகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது, வடகிழக்கு பருவமழையை ஓட்டி ரபி பருவ சாகுபடி தொடங்க உள்ளது. இதற்கு தேவையான உரங்கள் இருப்பில் உள்ளனர்.

அதன்படி யூரியா 2,873 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 1,879 மெ.டன், பொட்டாஷ் 422 மெட்ரிக் டன், காம்பளக்ஸ் 4.727 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 134 மெட்ரிக் டன், தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. மேலும், தூத்துக்குடியில் இருந்து ரெயில் மூலம் யூரியா 725 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 255 மெட்ரிக் டன், காம்பளக்ஸ் 255 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 60 மெட்ரிக் டன் என 1,295 மெட்ரிக் டன் உரங்கள் கிருஷ்ணகிரிக்கு வந்துள்ளது.

கடும் நடவடிக்கை

மாவட்டத்தில் உள்ள அனைத்து விற்பனையாளர்களும் இருப்பு வைத்திருக்கும் உரத்தை அரசு நிர்யணம் செய்துள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் விற்பனை செய்ய வேண்டும். உர இருப்பு விலை பட்டியல் விவரங்கள் விவசாயிகள் பார்க்கும் வண்ணம் தகவல் பலகை பராமரிக்க வேண்டும். விவசாயிகள் விரும்பும் உரத்தை மட்டுமே வழங்க வேண்டும்.

கூடுதலாக எந்த உரத்தையும் இணைத்து வழங்கி, வாங்க கட்டாயப்படுத்த கூடாது. விவசாயிகள் தங்கள் ஆதார் எண்ணை கொண்டு விற்பனை முனைய கருவி மூலம் வழங்கப்படும் ரசீதில் உள்ள விலையை மட்டுமே செலுத்தி உரம் வாங்க வேண்டும். விதி மீறல்கள் கண்டறியப்பட்டால், உர கட்டுப்பாட்டு சட்டம் 1985-ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story