தேயிலை செடிகளுக்கு உரமிடும் பணி மும்முரம்
கோத்தகிரி பகுதியில் தேயிலை செடிகளுக்கு உரமிடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
கோத்தகிரி
கோத்தகிரி பகுதியில் தேயிலை செடிகளுக்கு உரமிடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
தொடர் மழை
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் தேயிலை சாகுபடி செய்து வருகின்றனர். இதை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் கூட்டுறவு மற்றும் தனியார் தேயிலை தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலையை, தொழிற்சாலைகளுக்கு வினியோகம் செய்து வருமானம் ஈட்டி வருகிறார்கள்.
தொழிற்சாலைகளில் பச்சை தேயிலையை கொண்டு தேயிலைத்தூள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தேயிலை தோட்டங்களில் ஈரப்பதம் காணப்படுகிறது. மேலும் தொடர் மழை காரணமாக களை செடிகள் வளர்ந்து காணப்பட்டன. இதனால் தேயிலை செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் இருந்தது.
உரமிடும் பணி
இதைதொடர்ந்து கடந்த வாரம் முதல் தேயிலை தோட்டங்களில் வளர்ந்து இருந்த களை செடிகளை விவசாயிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது யூரியா பேஸ் மற்றும் பொட்டாஷ் கலந்த உரங்களை தங்களது தோட்டங்களில் தேயிலை செடிகளுக்கு இட்டு வருகின்றனர். இந்த பணி மும்முரமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, கோத்தகிரி பகுதியில் போதுமான மழை பெய்து உள்ளதால், மண்ணில் ஈரப்பதம் உள்ளது. எனவே, தேயிலை தோட்டத்திற்கு தற்போது உரமிட ஏற்ற தருணம் ஆகும். தற்போது தொழிலாளர்களை கொண்டு யூரியா பேஸ் மற்றும் பொட்டாஷ் கலந்த உரத்தை தேயிலை செடிகளுக்கு இட்டு வருகிறோம். ஒரு ஏக்கருக்கு 200 கிலோ கலவை உரம் தேவைப்படுகிறது. உரம் இடுவதால் பச்சை தேயிலை சாகுபடி கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.