வடமதுரை அருகே காளைகளுக்கு மாலை தாண்டும் திருவிழா


வடமதுரை அருகே காளைகளுக்கு மாலை தாண்டும் திருவிழா
x
தினத்தந்தி 5 July 2023 2:30 AM IST (Updated: 5 July 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

வடமதுரை அருகே காளைகளுக்கு மாலை தாண்டும் திருவிழா நடைபெற்றது.

திண்டுக்கல்

வடமதுரை அருகே சேர்வைக்காரன்பட்டியில் உள்ள பொம்மையபெருமாள், பெத்தக்கம்மாள் ஆகிய தெய்வங்களின் கோவில் திருவிழா 100 ஆண்டுகளுக்கு பிறகு கொண்டாடப்பட்டது. இதையொட்டி பொம்மையபெருமாள், பெத்தக்கம்மாள் ஆகிய தெய்வங்களுக்கு தீபாராதனை மற்றும் அபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் பொம்மையபெருமாள் சாமியின் ஆபரண பெட்டியை தேவராட்டம், சேர்வையாட்டம் போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் கொழுக்கட்டை படைத்து பெண்கள் வழிபட்டனர். 3-வது நாளாக நேற்று கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்து பால் பூஜை செய்தனர்.

இதைத்தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 'காளைகளுக்கு மாலை தாண்டும் திருவிழா' என்ற போட்டி நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களில் 9 மந்தைகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. முன்னதாக அந்த காளைகளை கொத்துக்கொம்பு என்ற இடத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்கிருந்து உருமி ஓசை முழங்கியதும், காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகள் சீறிப்பாயந்து எல்லைக்கோட்டை நோக்கி ஓடின.

பொதுமக்கள் கைகளைத்தட்டி காளைகளை உற்சாக மூட்டினர். எல்லையில் முங்கில் கம்பு மற்றும் வெள்ளைக்கொடியால் தோரண வாசல் கட்டப்பட்டது. எல்லைக்கோட்டை கடந்து சென்ற காளைகள் மீது மஞ்சள்பொடி தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதலிடத்தை பிடித்த கரூர் மாவட்டம் வில்வமரத்துப்பட்டியை சேர்ந்த கடுதூர் மாதாநாயக்கர் மந்தையை சேர்ந்த காளைக்கு பாரம்பரிய முறைப்படி எலுமிச்சம் பழம், மஞ்சள் பொடி, கரும்பு மற்றும் கொழுக்கட்டைகள் பரிசாக வழங்கப்பட்டது.


Related Tags :
Next Story