கொல்லிமலையில் பழங்குடியினர் தினவிழா: ரூ.2¼ கோடியில் நலத்திட்ட உதவிகள்; அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்


கொல்லிமலையில் பழங்குடியினர் தினவிழா: ரூ.2¼ கோடியில் நலத்திட்ட உதவிகள்; அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்
x

கொல்லிமலையில் நேற்று நடந்த உலக பழங்குடியினர் தின விழாவில் 250 நபர்களுக்கு ரூ.2.38 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்.

நாமக்கல்

நாமக்கல்:

பழங்குடியினர் தினவிழா

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள செங்கரை அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிட மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், உலக பழங்குடியினர் தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) மல்லிகா தலைமை தாங்கினார். பொன்னுசாமி எம்.எல்.ஏ., பழங்குடியினர் நல இயக்குனர் அண்ணாத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 3 பேருக்கு தையல் எந்திரங்களையும், 25 பேருக்கு ஓட்டுனர் உரிமத்தையும், 60 பேருக்கு பழங்குடியினர் நல அட்டைகளையும், தாட்கோ திட்டத்துறையின் சார்பில் 40 பேருக்கு ரூ.1 கோடியே 28 லட்சம் கடன் உதவிகள் உள்பட மொத்தம் ரூ.2 கோடியே 38 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் விழாவில் அவர் பேசியதாவது:-

ரூ.638 கோடி நிதி ஒதுக்கீடு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தீர்த்துவைத்து மேம்படுத்துவதற்காக தன்னாட்சி அமைப்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் மாநிலம் முழுவதும் இருந்து இதுவரை சென்னையை பார்க்காத 150 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளை சென்னைக்கு அழைத்து சென்று செஸ் போட்டி நடத்தப்பட்டு, அதில் 99 மாணவ, மாணவிகள் போட்டியை நேரில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டதுடன் அவர்கள் சிறந்த வீர்ர்களுடன் விளையாடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பெண்கள் உயர்கல்வி பெற வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உயர்கல்வி உதவித்தொகைக்காக வழங்க ரூ.638 கோடி நிதியை முதல்-அமைச்சர் ஒதுக்கீடு செய்து உள்ளார். எனவே பெற்றோர்கள் பெண் கல்வியை ஊக்குவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பிரகாஷ், பழங்குடியினர் நல திட்ட இயக்குனர் ராமசாமி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் (பொறுப்பு) மோகனசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story