இந்து-முஸ்லிம் ஒற்றுமையை பறைசாற்றும் பூக்குழி திருவிழா
இந்து-முஸ்லிம் ஒற்றுமையை பறைசாற்றும் பூக்குழி திருவிழா நடந்தது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே வஞ்சினிப்பட்டி கிராமத்தில் முகரம் பண்டிகையை முன்னிட்டு மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் விதமாக இந்து, முஸ்லிம்கள் இணைந்து கொண்டாடும் பூக்குழி திருவிழா நடைபெற்றது. சாதி, மத பேதமில்லாமல் அனைவரும் ஒன்றிணைந்து இப்பகுதியில் இந்த விழாவை நடத்தி வருகின்றனர். சுமார் 350 ஆண்டுகளுக்கும் மேலாக திருவிழா நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
வஞ்சினிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சையதுமுகைதீன் குடும்பத்தினா் இத்திருவிழாவை கிராமத்தினரோடு இணைந்து நடத்தி வருகின்றனா். இருப்பினும் 2004-ம் ஆண்டுக்கு பிறகு இத்திருவிழா கொண்டாடப்படாமல் இருந்தது. பின்பு கிராமத்தினர் சையதுமுகைதீன் குடும்பத்தினரை அழைத்து வந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விழாவை நடத்தினர். இதையொட்டி பூக்குழி வளா்க்கப்பட்டு பாத்தியா ஓதப்பட்டது. பின்பு சாம்பலை எடுத்து இஸ்லாமியர்கள் பூசி விடும் வினோத நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து தொழுகை, சாமி புறப்பாடு நடந்தது. அதன்பிறகு பக்தர்கள் பூக்குழிக்குள் இறங்கி தீ மிதித்தனர். அப்போது தீ கங்கை கைகளால் அள்ளி வாரி இறைத்தனர். அதன்பிறகு மண்வெட்டியால் நெருப்பை அள்ளி பெண்களுக்கு வழங்க அதை பெண்கள் வாங்கி சென்றனர். இந்த திருவிழாவில் ஏராளமான இந்துக்களும், முஸ்லிம்களும் கலந்து கொண்டனர்.