கோட்டூர் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
தேவகோட்டை அருகே பிரசித்தி பெற்ற கோட்டூர் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தேவகோட்டை,
தேவகோட்டை அருகே பிரசித்தி பெற்ற கோட்டூர் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பங்குனித் திருவிழா
தேவகோட்டை அருகே கோட்டூர் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் பங்குனி உற்சவ விழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்து அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட இக்கோவிலில் இந்த ஆண்டு பங்குனி உற்சவ விழாவை முன்னிட்டு யாகவேள்வியில் கணபதி ஹோமம், வாஸ்து சாந்தியுடன் கொடியேற்றம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கொடி மரத்திற்கு பால், தயிர், சந்தனம் மற்றும் பல்வேறு அபிஷேகமும் சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது.
தொடர்ந்து அம்மனுக்கு 16 வகையான அபிஷேகமும், 108 சங்காபிஷேகம், யாகவேள்வியில் உள்ள புனிதநீர் குடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோவிலை வளம் வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். பின்னர் 21 வகையான தீபாராதனை நடைபெற்று அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. மேலும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று முதல் காலையில் அம்மனுக்கு லெட்ச அர்ச்சனை நடைபெற்று மாலையில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் இரவு கும்மியடி நிகழ்ச்சி நடைபெறும்..
மஞ்சுவிரட்டு
திருவிழாவையொட்டி 28-ந் தேதி முளைப்பாரி இடுதல், 31-ந் தேதி திருவிளக்கு பூஜை, 2-ந் தேதி சிறுவர், சிறுமியர் கலை நிகழ்ச்சிகள், 3-ந் தேதி மாலை அம்மன் திருவீதி உலா, 4-ந் தேதி பால்குடம் மற்றும் காவடி எடுத்தல், இரவு முளைப்பாரியை அம்மன் சன்னதியில் வைத்தல், இரவு கலைநிகழ்ச்சிகள், 5-ந் தேதி காலையில் முளைப்பாரி செலுத்துதல், அன்று மாலை மஞ்சுவிரட்டு நடைபெறும்.விழாவையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.