கெலமங்கலத்தில் பட்டாளம்மன் கோவில் தேர்த்திருவிழா-திரளான பக்தர்கள் பங்கேற்பு
ராயக்கோட்டை:
ெகலமங்கலத்தில் பட்டாளம்மன் கோவில் தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பட்டாளம்மன் கோவில்
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் பழமையான பட்டாளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 386-வது ஆண்டு சித்திரை மாத தேர்த்திருவிழா நேற்று நடந்தது.
முன்னதாக அம்மனுக்கு பல்வேறு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளினார்.
தேரோட்டம்
விழாவில் கெலமங்கலம் பேரூராட்சி தலைவர் கே.பி.தேவராஜ் தலைமையில் கோவில் கமிட்டி தலைவர் கே.சி சென்னபசப்பா மற்றும் விழா குழுவினர்கள் முன்னிலையில் டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.
அலங்கரிக்கப்பட்ட தேர், கெலமங்கலம் நகரில் பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக இழுத்து செல்லப்பட்டது. தேர்த்திருவிழாவில் பக்தர்கள் தேரின் மீது உப்பு, மிளகு, வாழைப்பழம் போன்றவற்றை எறிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திரளான பக்தர்கள்
இதில் ஓசூர், தளி, தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கர்நாடக மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் விழாவில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் அன்னதானம், நீர்மோர், பானம் வழங்கப்பட்டது.