பெரியமோட்டூர் முருகன் கோவில் கும்பாபிஷேக விழா
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே பெரியமோட்டூர் கிராமம் வெள்ளிமலைமேல் அமைந்துள்ள வள்ளி, தெய்வானை சமேத முருகன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி கடந்த 22-ந் தேதி மாலை முதற்கால வேள்வி பூஜை, விநாயகர் பூஜை, காப்பு கட்டுதல், மகா கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடந்தன. தொடர்ந்து இரண்டாம் கால யாக வேள்வியும், மூன்றாம் கால யாக வேள்வியும், நேற்று முன்தினம் நான்காம், ஐந்தாம் கால யாக வேள்வியும், அபிஷேக ஆராதனையும் நடந்தன.
நேற்று காலை விநாயகர் பூஜை, ஆறாம் கால யாகசாலை பூஜைகள், நாடி சந்தானம் ஆகியவையும், 8 மணிக்கு கடம் புறப்பாடு, விமான கோபுரம், வள்ளி, தெய்வானை உடனுறை முருகப்பெருமான் கோவில் மற்றும் விநாயகர் கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தன. தொடர்ந்து மகா நெய் வேத்தியம், கோ பூஜை, மகா தீபாராதனையும், தீர்த்த பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.