ராஜகோபாலசாமி கோவிலில் ஆனி தெப்ப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


ராஜகோபாலசாமி கோவிலில் ஆனி தெப்ப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 26 Jun 2023 12:45 AM IST (Updated: 26 Jun 2023 12:46 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் ஆனி தெப்ப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவாரூர்

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் ஆனி தெப்ப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ராஜகோபாலசாமி கோவில்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூரைப் போல, இந்த கோவில் இருக்கும் திருத்தலத்தையும் 'தட்சிண துவாரகை' என்கிறார்கள். இங்கு வாசுதேவப்பெருமாள் மூலவராகவும், உற்சவராக ராஜகோபாலசாமியும் அருள்பாலித்து வருகிறார்கள். செங்கமலத்தாயாரும் அருள்பாலித்து வருகிறார்.

பிரசித்திப்பெற்ற வைணவ கோவில்களில் ஒன்றான மன்னார்குடி ராஜகோபாலசாமி ேகாவிலில் ஆண்டு முழுவதும் பெருமாளுக்கு உற்சவம் நடப்பது சிறப்பம்சமாகும். பங்குனியில் பிரம்மோற்சவம், சித்திரை, வைகாசியில் கோடை உற்சவம், ஆடிப்பூரம், நவராத்திரி, மாசியில் ராஜகோபாலனுக்கு ஊஞ்சல் உற்சவம் என இக்கோவில் எப்போதும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும்.

தீர்த்தக்குளங்கள்

துர்வாச தீர்த்தம், திருப்பாற்கடல், கோபிகா தீர்த்தம், சங்கு தீர்த்தம், சக்கர தீர்த்தம் ஆகிய தீர்த்தங்களும் இக்கோவிலில் உள்ளன. இங்கு நடைபெறும் வெண்ணெயத்தாழி உற்சவம் பிரசித்திப்பெற்ற விழாக்களுள் ஒன்றாகும்.

இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஹரித்ராநதி தெப்பக்குளத்தில் தெப்ப திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

கொடியேற்றம்

அதன்படி இந்த ஆண்டுக்கான தெப்ப திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது கருடன் உருவம் பொறித்த கொடியை கோவில் தீட்சிதர்கள் ராஜகோபாலசாமி கோவில் கொடிமரத்தில் ஏற்றிவைத்தனர். இதையொட்டி ராஜகோபாலசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ராஜாகோபாலனை வழிபட்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்வாக வர்த்தக சங்கத்தினர் நடத்தும் தெப்ப உற்சவம் அடுத்த மாதம் (ஜூலை) 3-ந் தேதி ஹரித்திரா நதி தெப்பக்குளத்தில் நடைபெற உள்ளது. இதில் பெருமாள் ருக்மணி, சத்யபாமா சமேதராக கிருஷ்ண அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயலாளர் மாதவன் மற்றும் அலுவலர்கள் செய்து வருகிறார்கள்.


Next Story