தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 50 படுக்கை வசதிகளுடன் காய்ச்சல் சிகிச்சை பிரிவு


தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 50 படுக்கை வசதிகளுடன் காய்ச்சல் சிகிச்சை பிரிவு
x

தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 50 படுக்கை வசதிகளுடன் காய்ச்சல் சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

தேனி

தமிழகம் முழுவதும் ஏராளமான மக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எச்-1, என்-1 வைரஸ் தாக்குதலால் சளி, இருமலுடன் இந்த காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுதவிர டெங்கு காய்ச்சலும் பரவி வருகிறது. இதையடுத்து அரசு மருத்துவமனைகளில் முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 50 படுக்கை வசதிகளுடன் கூடிய 24 மணிநேர காய்ச்சல் சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு என தனித்தனியாக படுக்கை வசதிகள் கொண்டதாக இந்த வார்டு தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் கூறியதாவது:-

தேனி மாவட்டத்தில் எச்-1, என்-1 வைரஸ் காய்ச்சல் பாதிப்பு மற்ற மாவட்டங்களை விட குறைவாகவே காணப்படுகிறது. இருப்பினும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 24 மணிநேர காய்ச்சல் சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இங்கு கொசுவலையுடன் கூடிய 50 படுக்கை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் காய்ச்சல் சிகிச்சைக்கு தேவையான மருந்து மாத்திரைகள் போதுமான அளவில் இருப்பில் உள்ளது. எனவே காய்ச்சல் அறிகுறி உள்ள பொதுமக்கள் எந்த நேரமாக இருந்தாலும் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை காய்ச்சல் சிகிச்சை பிரிவில் உடல் பரிசோதனை செய்து சிகிச்சை பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story