விழுப்புரத்தில் இருந்து கடலூருக்கு குறைந்த எண்ணிக்கையில் அரசு பஸ்கள் ஓடின
பா.ம.க. போராட்டம் எதிரொலி: விழுப்புரத்தில் இருந்து கடலூருக்கு குறைந்த எண்ணிக்கையில் அரசு பஸ்கள் ஓடின தனியார் பஸ்கள் முழுவதுமாக நிறுத்தம்
விழுப்புரம்
என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து நேற்று பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதன் எதிரொலியாக விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து நேற்று கடலூருக்கு மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. ஒரு மணி நேரம் முதல் 1½ மணி நேரத்திற்கு ஒருமுறை மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டன. அந்த பஸ்களிலும் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் குறைந்த அளவிலேயே பயணிகள் பயணம் செய்தனர். இந்த அரசு பஸ்கள், விழுப்புரத்தில் இருந்து மாவட்ட எல்லையான சின்னக்கள்ளிப்பட்டு தென்பெண்ணையாற்று பாலம் வரை போலீஸ் பாதுகாப்பின்றி வழக்கம்போல் இயக்கப்பட்டன. அதன் பிறகு கடலூர் மாவட்ட எல்லையான கண்டரக்கோட்டையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் இந்த முழு அடைப்பின் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கடலூருக்கு தனியார் பஸ்கள் எதுவும் ஓடவில்லை. இதன் காரணமாக விழுப்புரம் பஸ் நிலையத்தில் கடலூர் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிற்கும் இடம் வெறிச்சோடி காணப்பட்டது.