கள ஆய்வு செய்து இ-பட்டா வழங்க வேண்டும்
கள ஆய்வு செய்து இ-பட்டா வழங்க வேண்டும் என்று நில நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் (2019-20) மற்றும் (2020-21) ஆகிய ஆண்டுகளுக்கான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சென்னை நில நிர்வாக ஆணையர் நாகராஜன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நில நிர்வாக ஆணையர் அலுவலக ஆணை, கருணை அடிப்படை பணி நியமனங்கள் பதிவேடு, தகவல் அறியும் உரிமைச் சட்ட பதிவேடு, வருவாய்த் தீர்வாயம் பதிவேடு, நிலவருவாய் பதிவேடு, நிலமாற்றம் மற்றும் நிலச் சீர்த்திருத்த பதிவேடுகள், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதி பெறும் மனுக்கள் பதிவேடு, முதல்-அமைச்சரின் விபத்து நிவாரண பதிவேடு, நீதிமன்ற வழக்குகள் பதிவேடு உள்ளிட்ட அனைத்து வகையான பதிவேடுகள், முதல்வரின் முகவரி, அனைத்து திட்டங்களின் பணி முன்னேற்றம், திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
கள ஆய்வு செய்து இ-பட்டா
கூட்டத்தில் நில நிர்வாக ஆணையர் நாகராஜன் பேசியதாவது:-
முதல்வரின் முகவரி நிலுவை மனுக்களை குறைக்க வேண்டும். இணையவழி சான்றிதழ்களை உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்கவும், கள ஆய்வு செய்து இ-பட்டா வழங்கிட வேண்டு்ம்.
விளிம்பு நிலையில் வாழும் மக்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மக்கள் ஆகியோருக்கு பட்டா வழங்கிட நில எடுப்பு செய்வது குறித்து ஆட்சேபனையுள்ள புறம்போக்குகளில் வாழும் விளிம்பு நிலை மக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். நீதிமன்ற வழக்குகள் தொடர்பான கோப்புகளை சரியான முறையில் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.