5 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்கள் களப்பயணம்


5 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்கள் களப்பயணம்
x
தினத்தந்தி 28 Feb 2023 12:15 AM IST (Updated: 28 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

உயர்கல்வி குறித்து விழிப்புணர்வு ஆர்வத்தை ஏற்படுத்த, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 16 கல்லூரிகளுக்கு 5 ஆயிரம் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் களப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி

உயர்கல்வி குறித்து விழிப்புணர்வு ஆர்வத்தை ஏற்படுத்த, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 16 கல்லூரிகளுக்கு 5 ஆயிரம் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் களப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார்.

உயர்கல்வி வழிகாட்டல்

கிருஷ்ணகிரியில் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நேற்று நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல், கல்லூரி களப்பயணம் நிகழ்ச்சி நடந்தது. இதை கலெக்டர் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்து, அரசு பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

அப்போது கலெக்டர் பேசியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 106 அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகள், உயர்கல்வி படிப்புகள் குறித்த விழிப்புணர்வு, ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் கல்லூரி களப்பயணம் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி, ஓசூர் கோழி வளர்ப்பு மற்றும் மேலாண்மை கல்லூரி, கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரி என மொத்தம் 16 கல்லூரிகளுக்கு 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் களப்பயணம் செல்ல உள்ளனர்.

முன்னேற வேண்டும்

இந்த களப்பயணத்தில் பங்கேற்றுள்ள மாணவிகள், எதிர்காலத்தில் உயர்கல்வி படிப்பதற்கு ஏதுவாக கல்லூரியில் உள்ள பாடப்பிரிவுகள், செயல்படும் விதம், ஆய்வுக்கூடம், நூலகம், விளையாட்டு மைதானம், பாடப்பரிவுகள் குறித்த விவரங்களை கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். பிளஸ்-2 முடித்தவுடன் உயர்கல்வியில் எந்த பாடப்பிரிவை எடுப்பது என்பதை நீங்கள் எளிதாக தேர்வு செய்யமுடியும்.

மேலும், கல்லூரிகளுக்கு களப்பயணமாக வரும் மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், கல்லூரியில் உள்ள வசதிகள், அரசு வழங்கப்படும் உதவித்தொகைகள் குறித்து விளக்கி கூற வேண்டும். மாணவ, மாணவிகள்பிளஸ்-2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தாங்கள் விரும்பும் உயர்கல்வியை படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அறிவியல் கண்காட்சி

முன்னதாக கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த அறிவியல் கண்காட்சியை மாணவிகளுடன் இணைந்து கலெக்டர் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, தாசில்தார் சம்பத், கல்லூரி முதல்வர் கோவிந்தராசு, மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை, உதவி திட்ட அலுவலர் வடிவேல், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் வள்ளி சித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story