நிரம்பி வழியும் தடுப்பணை
நிரம்பி வழியும் தடுப்பணை
காங்கயம்,
காங்கயம் அருகே மழை நீர் வரத்தால் தடுப்பணை நிரம்பியது.
காங்கயம் ஒன்றியம், வீரணம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பல்லவராயன்பாளையம் பகுதியில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 3 வருடங்களுக்கு முன்பு ரூ.6.42 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டது. இந்த நிலையில் காங்கயம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையின் காரணமாக, இந்தத் தடுப்பணையில் நீர் நிரம்பி வழிந்து சென்று கொண்டிருக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து இந்த தடுப்பணையை காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து அவர் கூறியபோது: இந்தத் தடுப்பணை கட்டப்பட்ட 3 வருடங்களுக்குப் பின்னர் இப்போதுதான் முதல் முறையாக நீர் நிரம்பியுள்ளது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, இப்பகுதியில் உள்ள கிணறுகள், ஊராட்சிக்கு தண்ணீர் வழங்கக் கூடிய ஆழ்குழாய் கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மேலும் இதேபோல் காங்கயம் ஒன்றியப் பகுதிகளில் 3 ஆண்டுகளில் 32 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. இதில் தற்போது பெய்த மழையால் 20-க்கும் மேற்பட்ட தடுப்பணைகளில் தண்ணீர் முழுமையாக நிரம்பியுள்ளது. என்றார்.
இந்த ஆய்வின்போது காங்கயம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமலாதேவி, ராகவேந்தரன், ஒன்றியப் பொறியாளர் சரவணக்குமார், வீரணம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் உமாநாயகி, துணைத் தலைவர் ஈஸ்வரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.