கோப்புகள் தூய தமிழில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்


கோப்புகள் தூய தமிழில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
x

அரசு அலுவலகங்களில் கோப்புகள் அனைத்தும் தூய தமிழில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என கலெக்டர் வளர்மதி அறிவுறுத்தினார்.

ராணிப்பேட்டை

பயிலரங்கம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தமிழில் பிழையின்றி கோப்புகள் தயார் செய்யவும், அனைத்து வகையான கோப்புகளும் தூய தமிழ் நடைமுறையை பயன்படுத்தி தயார் செய்வது குறித்தும் 2 நாள் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார்.

அவர் பேசியதாவது:-

கற்றுத்தர வேண்டும்

தமிழர்களுக்கு உயிராகவும், உயிர் மூச்சாகவும் விளங்கும் தமிழ் மொழியை பேசுவது அவமானம் என கருதும் அளவிற்கு நலிந்து வருவது மிகவும் கவலைக்குரியது. பிற மொழிகள் மீதான மோகமும், நாகரீக மாற்றங்களும் தமிழை இரண்டாம் மொழியாக கருதுவதற்கு உறுதுணையாக அமைகின்றது. எனவே தமிழ் மொழியை பாதுகாப்பது அவசியமாகிறது. தமிழ் மொழியை சிறு வயது முதலே குழந்தைகளுக்கு பேசுவதற்கும், எழுதுவதற்கும், படிப்பதற்கும் கற்றுத்தர வேண்டும்.

இன்றைய சூழ்நிலையில் நமது குழந்தைகளுக்கு தமிழில் உள்ள விளக்கங்களை ஆங்கில வார்த்தைகளை சொல்லி புரிய வைக்க வேண்டிய நிலைமையில் இருக்கின்றோம். இது மிகவும் வருத்தத்திற்குரியது. தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை தெரிவிக்க வேண்டும். அடுத்த தலைமுறை தமிழை மறந்து விடாமல் இருக்க நமது குழந்தைகளுக்கு தமிழ் வழிக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். மற்ற நாடுகள் அனைத்தும் தமிழ்நாட்டின் பெருமையை போற்றுகின்றன. ஆனால் நமக்கு அதன் பெருமை புரிவதில்லை. இந்தநிலை மாற வேண்டும்.

தூய தமிழில்

அரசு அலுவலர்களாகிய நாம் அரசு அலுவலகங்களில் கோப்புகள் தூய தமிழில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு கோப்புகளும் சாதாரண மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். தூய தமிழ் வார்த்தைகள் குறித்த சந்தேகங்களை இந்த பயிலரங்கத்தில் தெரிந்து கொண்டிருப்பீர்கள். அவற்றை முறையாக தங்களின் அலுவலக நடைமுறையில் பயன்படுத்த வேண்டும். அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் தமது அலுவல் பணிகளில், கோப்புகளில் இயன்ற அளவு பிறமொழிச் சொற்களைக் கலக்காது தூய தமிழில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில் பெயர்களை தமிழில் எழுதுதல் வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குனர் ராஜேஸ்வரி, தர்மபுரி அரசு கலைக் கல்லூரி முதல்வர் கிள்ளிவளவன், தர்மபுரி மாவட்ட தமிழ்ச் சங்க செயலாளர் சவுந்தர பாண்டியன், வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரி தமிழ்த் துறை தலைவர் கவிதா மற்றும் அரசுத் துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story