தூத்துக்குடியில் தீபாவளி பொருட்கள் இறுதிக்கட்ட விற்பனை
தூத்துக்குடியில் தீபாவளி பொருட்கள் இறுதிக்கட்ட விற்பனை களை கட்டியது.
தீபாவளி பண்டிகை 24--ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மக்கள் ஜவுளி உள்ளிட்ட பொருட்கள் வாங்கும் பணியில் ஈடுபட்டனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் காலை முதலே கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் தூத்துக்குடிக்கு வரத் தொடங்கினர். இதனால் மதியத்துக்கு மேல் இந்த கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. மாலையில் நகரில் உள்ள அனைத்து சாலைகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
தூத்துக்குடி டபிள்யூ.ஜி.சி. சாலை, நகைக்கடை பஜார், பாளயங்கோட்டை சாலை போன்ற பிரதான சாலைகளில் மக்கள் கூட்டம் மிகுந்து காணப்பட்டது. ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிலையங்கள், மார்க்கெட்டுகள், பூமார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தூத்துக்குடி நகரில் பாளையங்கோட்டை சாலை, டபிள்யூ.ஜி.சி. சாலை, வி.இ. சாலை, எட்டயபுரம் சாலை, ஜெயராஜ் சாலை, அண்ணாநகர் பிரதான சாலை போன்ற அனைத்து சாலையோரங்களிலும் ஏராளமான தற்காலிக கடைகள் முளைத்திருந்தன. ஆயத்த ஆடைகள், பேன்சி பொருட்கள், கைப்பைகள் போன்றவை குவித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. ஏராளமானோர் சாலையோர கடைகளில் ஆடைகள், பொருட்களை ஆர்வமுடன் வாங்கினர். இதனால் இறுதிக்கட்ட விற்பனை களை கட்டியது.
உச்சநீதிமன்ற உத்தரவு காரணமாக பட்டாசு வெடிக்க நேரம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தீபாவளி அன்று காலை 1 மணி நேரம், இரவு 1 மணி நேரம் என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆனாலும் தூத்துக்குடியில் பட்டாசு விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. நகரின் பல பகுதிகளில் புதிதாக பட்டாசு கடைகள் வைக்கப்பட்டு இருந்தன. அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
இதனால் தூத்துக்குடியில் உள்ள அனைத்து பிரதான சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர். நகரின் 4 முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களை அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஒலிபெருக்கிகள் மூலம் பொதுமக்களுக்கு பல்வேறு எச்சரிக்கைகள், விழிப்புணர்வு கருத்துகளை போலீசார் தெரிவித்தனர். மேலும் சுழலும் கேமராக்கள் பொருத்தப்பட்ட 2 கண்காணிப்பு வாகனங்கள் மூலம் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோன்று மாவட்டம் முழுவதும் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.