தீபாவளி பொருட்கள் இறுதிக்கட்ட விற்பனை; கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது
நெல்லையில் தீபாவளி பொருட்கள் இறுதிக்கட்ட விற்பனை மும்முரமாக நடைபெற்றது. கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
நெல்லையில் தீபாவளி பொருட்கள் இறுதிக்கட்ட விற்பனை மும்முரமாக நடைபெற்றது. கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
இறுதி கட்ட விற்பனை
தீபாவளி பண்டிகை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதற்காக கடந்த 10 நாட்களுக்கு மேலாக ஜவுளி கடைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வந்தது. புத்தாடைகள், பொருட்களை வாங்கிச்சென்றனர்.
இந்த நிலையில் நேற்று தீபாவளி பொருட்கள் வாங்குவதற்கு கடைசி நாள் என்பதால் இறுதி கட்ட விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
அலைமோதிய மக்கள் கூட்டம்
நெல்லை டவுன் ரதவீதிகள், தெற்கு மவுண்ட் ரோடு, வடக்கு மவுண்ட் ரோடு, ஸ்ரீபுரம், சந்திப்பு, வண்ணார்பேட்டை, முருகன்குறிச்சி, மார்க்கெட், சமாதானபுரம், நெல்லை புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
ரெடிமேடு ஆயத்த ஆடைகளை அதிகளவு வாங்கிச்சென்றார்கள். ஒருசில பெண்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட சேலைகளை நேற்று தேர்வு செய்து வாங்கிச்சென்றார்கள்.
மிட்டாய் கடைகள்
இதுதவிர இனிப்பு, பலகாரங்களை வாங்குவதற்கு மிட்டாய் கடைகளுக்கு நேற்று மக்கள் படையெடுத்தனர். தங்களது வீடுகளுக்கும், நண்பர்களுக்கு கொடுப்பதற்கும் ½ கிலோ, 1 கிலோ என இனிப்பு வகைகளை வாங்கிச்சென்றனர். இதனால் இனிப்பு கடைகள் முன்பு நேற்று மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
மேலும் வெடி கடைகளில் இறுதிக்கட்ட பட்டாசு விற்பனை மும்முரமாக நடைபெற்றது. குழந்தைகள் பெற்றோருடன் வந்து தங்களுக்கு விருப்பமான பட்டாசுகளை வாங்கிச்சென்றனர். நேற்று இரவு விடிய, விடிய ஜவுளி, பட்டாசு, இனிப்புகள் வியாபாரம் மும்முரமாக நடைபெற்றது.
பூக்கடைகள்
இதே போல் பூக்கடைகளில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நெல்லை சந்திப்பு பூ மார்க்கெட், டவுன், பாளையங்கோட்டை பூக்கடைகளில் பொது மக்கள் பூக்களை வாங்கிச்சென்றனர்.
சந்திப்பு மொத்த கடைகளில் பெண்கள் வந்து வீட்டுக்கு தேவையான மல்லிகை, பிச்சி பூக்களை வாங்கிச்சென்றனர். இதே போல் வியாபாரிகளும் மல்லிகை, பிச்சி, செவ்வந்தி, கேந்தி உள்ளிட்ட பூக்களை வாங்கிச்சென்றனர். இதனால் மல்லிகை பூ கிலோ ரூ.500-ல் இருந்து ரூ.1,300 ஆக உயர்ந்தது. பிச்சி பூ கிலோ ரூ.2 ஆயிரம் வரை விற்பனை ஆனது. மற்ற பூக்களின் விலையும் சற்று உயர்ந்திருந்தது.