பைனான்ஸ் அதிபர் வெட்டிக்கொலை


பைனான்ஸ் அதிபர் வெட்டிக்கொலை
x

அரிமளம் அருகே பைனான்ஸ் அதிபர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

அரிமளம்:

பைனான்ஸ் அதிபர்

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே, கல்லூர் ஊராட்சி தெக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் மாங்குடி (வயது 46). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இவருக்கு சகுந்தலா (38) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

இவர், வீட்டின் அருகே உள்ள தனக்கு சொந்தமான தென்னந்தோப்பில் மஞ்சுவிரட்டு காளைகளை வளர்த்து வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் தென்னந்தோப்பில் மஞ்சுவிரட்டு காளைகளை பராமரித்து கொண்டிருந்தார்.

வெட்டிக்கொலை

அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் சிலர் அரிவாளால் மாங்குடியை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதில் ரத்தம் கொட்டியபடி மாங்குடி துடிதுடித்து இறந்தார். இதையடுத்து சில மணி நேரம் கழித்து அந்த வழியாக வந்தவர்கள் மாங்குடி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுகுறித்து மாங்குடியின் குடும்பத்தினருக்கும், கே.புதுப்பட்டி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாங்குடி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

3 தனிப்படைகள் அமைப்பு

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தனிப்படையிலும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில், 5 போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

முற்றுகை போராட்டம்

இந்நிலையில் பைனான்ஸ் அதிபர் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி மாங்குடியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கே.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த அறந்தாங்கி, பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தினேஷ்குமார், அப்துல் ரகுமான் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதால் உடனடியாக குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த முற்றுகை போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பல்வேறு வழக்குகள்

கொலை செய்யப்பட்ட மாங்குடி மீது கே.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில் 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது. சிவகங்கை மாவட்ட போலீஸ் நிலையத்திலும் பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் மாங்குடி கோவை உள்ளிட்ட ஊர்களில் பல்வேறு தொழில் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. தொழிலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மாங்குடியை கொலை செய்தார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மாங்குடியின் செல்போன் கைப்பற்றப்பட்டு அவரிடம் யார்? யார்? பேசினார்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.


Next Story