நிதி நிறுவன அதிபர் கிணற்றில் குதித்து தற்கொலை
வட்டிக்கு கொடுத்த பணம் வசூல் ஆகாததால் விரக்தி அடைந்த நிதி நிறுவன அதிபர் விஷம் தின்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
நிதி நிறுவன அதிபர்
கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் அருகே உள்ள ஒரம்புப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 53). இவர் புன்னம் சத்திரம் பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவரது மனைவி பூங்கொடி. இந்த தம்பதிக்கு சோபனா என்ற மகளும், அருண் என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை பாஸ்கரன் நிதி நிறுவனத்திற்கு செல்வதாக வீட்டில் இருந்தவர்களிடம் கூறிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். ஆனால் மாலை வெகுநேரம் ஆகியும் அவர் வீட்டிற்கும் வரவில்லை, நிதி நிறுவனமும் பூட்டி கிடந்துள்ளது.
மோட்டார் சைக்கிள் நின்றது
இதுகுறித்து அறிந்த அருண் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் பாஸ்கரனை தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இரவு 11 மணியளவில் பாஸ்கரனுக்கு சொந்தமான தோட்டத்திற்கு சென்று பார்த்துள்ளனர்.
அங்கு கிணற்றின் அருகே பாஸ்கரனின் மோட்டார் சைக்கிள் நின்று கொண்டிருந்தது. அதன் அருகே பாஸ்கரனின் செருப்பு கிடந்துள்ளது. மேலும், விஷ மாத்திரை டப்பாவும் கிடந்துள்ளது.
பிணமாக மீட்பு
இதுகுறித்து வேலாயுதம்பாளைம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றில் இறங்கி சுமார் 2½ மணி நேரம் போராடி பாஸ்கரனை பிணமாக மீட்டனர்.
இதையடுத்து வேலாயுதம்பாளையம் போலீசார் பாஸ்கரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வழக்கு
இதுகுறித்து பாஸ்கரனின் மகன் அருண் ெகாடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் சிறப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார். முதற்கட்ட விசாரணையில், பாஸ்கர் நடத்தி வந்த நிதி நிறுவனத்தின் மூலம் அவர் வட்டிக்கு கொடுத்த பணம் சரியாக வசூல் ஆகவில்லையாம்.
இதனால் கடந்த ஒரு மாதமாக பாஸ்கரன் மனமுடைந்து காணப்பட்டதால், விஷ மாத்திரையை தின்று, கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.