இறந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு நிதி உதவி


இறந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு நிதி உதவி
x
தினத்தந்தி 20 Feb 2023 6:45 PM GMT (Updated: 20 Feb 2023 6:45 PM GMT)

நாகரசம்பட்டி அருகே இறந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு நிதி உதவியை மதியழகன் எம்.எல்.ஏ. நேரில் வழங்கினார்

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி அருகே வேலம்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் படுகாயம் அடைந்த ராணுவ வீரர் பிரபு இறந்தார். மற்றொரு ராணுவ வீரர் பிரபாகரன் உள்ளிட்ட சிலர் காயமடைந்தனர். இதில் இறந்த ராணுவ வீரர் பிரபுவின் வீட்டிற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் மதியழகன் எம்.எல்.ஏ. நேரில் சென்று உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். பின்னர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மரணம் அடைந்த பிரபுவின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியும், காயமடைந்த மற்றொரு ராணுவ வீரர் பிரபாகரன் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் நிதியும் எம்.எல்.ஏ. வழங்கினார்.

பின்னர் மதியழகன் எம்.எல்.ஏ. கூறுகையில், வேலம்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருகுடும்பத்தினர் இடையே ஏற்பட்ட பிரச்சினை, கைகலப்பாகி தாக்குதலுக்கு உள்ளான ராணுவ வீரர் இறந்து விட்டார். இதில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தை சிலர் அரசியல் ஆக்கி வருகிறார்கள். முதல்-அமைச்சர் தலைமையிலான தமிழக அரசும், காவல்துறையும் இந்த சம்பவத்தில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே இந்த விவகாரத்தை யாரும் அரசியல் ஆக்க வேண்டாம். அவர்கள் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும். இந்த விவகாரத்தை அரசியல் ஆக்காமல் மற்ற கட்சியினரும், அமைப்பினரும் இதை பின்பற்ற வேண்டும் என்று கூறினார். அப்போது மாவட்ட அவை தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், நாகரசம்பட்டி பேரூராட்சி தலைவர் தம்பிதுரை மற்றும் தி.மு.க. நிர்வாகிகள். பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.


Next Story