இறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிதி உதவி
இறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.
தமிழக காவல்துறையில் கடந்த 2010-ம் ஆண்டு காவலர்களாக பணியில் சேர்ந்த போலீசார் காக்கும் கரங்கள் என்ற அமைப்பை ஏற்படுத்தி தங்களோடு பணியில் சேர்ந்த காவலர்களின் குடும்பத்திற்கு அவர்கள் பாதிப்புக்குள்ளாகும் போது உதவி வருகின்றனர். இந்நிலையில் பரமக்குடி போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றிய பாரதிதாசன் என்பவர் நுரையீரலில் கட்டி உருவாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த சில நாட்களுக்கு முன்னர் இறந்தார். அவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர். இதனை தொடர்ந்து காக்கும் கரங்கள் அமைப்பின் சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள 2010-ம் ஆண்டில் பணியில் சேர்ந்த காவலர்களிடம் நிதி திரட்டப்பட்டது.
இவ்வாறு திரட்டப்பட்ட நிதியில் மேற்கண்ட தலைமை காவலரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சத்து 21 ஆயிரத்து 210 நிதி வழங்கப்பட்டது. மேற்கண்ட நிதியினை இறந்த தலைமை காவலரின் குடும்பத்தினரிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணபாண்டியன் மற்றும் 2010-ம் ஆண்டு பணியில் சேர்ந்த போலீசார் கலந்து கொண்டனர்.