ரெடிமேடு ஆடை தொழில் தொடங்க நிதி உதவி; கலெக்டர் ஆகாஷ் தகவல்


ரெடிமேடு ஆடை தொழில் தொடங்க நிதி உதவி; கலெக்டர் ஆகாஷ் தகவல்
x

ரெடிமேடு ஆடை தொழில் தொடங்க நிதி உதவி வழங்கப்படும் என தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

தென்காசி

ரெடிமேடு ஆடை தொழில் தொடங்க நிதி உதவி வழங்கப்படும் என தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஆடையக உற்பத்தி

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும் இந்த மக்களில் 10 பேரைக் கொண்டு குழுவாக அமைத்து ஆயத்த ஆடையக உற்பத்திக்கு ரூ.3 லட்சம் நிதி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

எனவே பயனாளிகளை தேர்வு செய்வதற்கான தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களைக் கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும். விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவை பெண்கள் அமைந்துள்ள குழுவிற்கு முன்னுரிமை அளிக்கப்படும். இவர்கள் 10 பேரை கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும். இந்த 10 பேருக்கும் தையல் தொழில் அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கலாம்

குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் இனத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். குழுவில் உள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இந்த திட்டத்தில் பங்கு கொள்ள ஆர்வமாக உள்ள மற்றும் இத்தொழிலில் முன் அனுபவம் உள்ள குழுவினர் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story