நிதி நிறுவன ஊழியர் பலி
கூடலூரில் ஸ்கூட்டர் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தனியார் நிதி நிறுவன ஊழியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
கூடலூர்,
கூடலூரில் ஸ்கூட்டர் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தனியார் நிதி நிறுவன ஊழியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
லாரி-ஸ்கூட்டர் மோதியது
கூடலூர் கோழிப்பாலம் அருகே இரும்பு பாலம் பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் சுரேஷ்குமார் (வயது 21). இவர் கூடலூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். அவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு வளர்ப்பு நாய் கடித்தது. இதனால் கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி செலுத்தி வந்து உள்ளார்.
இந்தநிலையில் நேற்று சுரேஷ்குமார் வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் தடுப்பூசி செலுத்துவதற்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். பின்னர் காலை 10.30 மணிக்கு தடுப்பூசி செலுத்தி விட்டு கூடலூர்-கோழிக்கோடு சாலை வழியாக வீடு திரும்பி கொண்டிருந்தார். செம்பாலா நந்தட்டி பகுதியில் சுரேஷ்குமார் முன்னால் சென்ற காரை முந்தி செல்ல முயன்றார். இந்த சமயத்தில் எதிரே கேரளாவில் இருந்து கூடலூர் நோக்கி சரக்கு லாரி வேகமாக வந்தது. அப்போது திடீரென சரக்கு லாரி ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியது.
நிறுவன ஊழியர் பலி
இந்த விபத்தில் சுரேஷ்குமார் லாரியில் அடியில் சிக்கினார். இதில் தலையில் படுகாயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். விபத்தின் போது சுரேஷ்குமார் தலையில் அணிந்து இருந்த ஹெல்மெட் சின்னா பின்னமாகியது. விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. சுரேஷ்குமார் உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.