நிதிநிறுவன அதிபர் பலி
ஸ்ரீராமபுரம் அருகே டிப்பர் லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதியதில் நிதி நிறுவன அதிபர் பலியானார்.
ஒட்டன்சத்திரம் தாலுகா மார்க்கம்பட்டியை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 55). நிதி நிறுவன அதிபர். அவருடைய மனைவி மணிமாலா (48). நேற்று இவர்கள், வடமதுரையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். வேடசந்தூர்-வடமதுரை சாலையில், ஸ்ரீராமபுரம் அருகே சாலையை கடப்பதற்காக குப்புசாமி நின்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் எம்சாண்ட் மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட குப்புசாமி மீது லாரி ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் மணிமாலா படுகாயம் அடைந்தார். இதற்கிடையே மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி, எதிரே வந்த கார் மீது மோதி சாலையோரத்தில் நின்றது. இதனையடுத்து டிரைவர் லாரியில் இருந்து இறங்கி தப்பி ஓடி விட்டார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் காயம் அடைந்த மணிமாலாவை மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.