வட்டிக்கு பணம் கொடுப்பவர் வெட்டிக் கொலை
வேளாங்கண்ணியில் வட்டிக்கு பணம் கொடுப்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
வேளாங்கண்ணி;
வேளாங்கண்ணியில் வட்டிக்கு பணம் கொடுப்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட தெற்குபொய்கைநல்லூர் கீழத்தெருவை சேர்ந்தவர் வீராசாமி. இவருடைய மகன் மனோகரன்(வயது40). இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று இரவு 10 மணி அளவில் மனோகரன் வேளாங்கண்ணி முச்சந்தி பகுதியில் உள்ள அலுவலகத்தில் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார்.
வெட்டிக்கொலை
அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் திடீரென அலுவலகத்துக்குள் புகுந்து மனோகரனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். அப்போது மர்ம நபர்களை மனோகரனின் நண்பர் மணிவேல் தடுக்க முயன்றாா். இதனால் அவருக்கும் அாிவாள் வெட்டு விழுந்தது. அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த மனோகரன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் இருந்து மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர். உடனே அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மனோகரனை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மனோகரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அரிவாள் வெட்டில் காயமடைந்த மணிவேல் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வலைவீச்சு
இது குறித்து தகவல் அறிந்த நாகை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.. இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் அங்கு அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வட்டிக்கு பணம் கொடுப்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் வேளாங்கண்ணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.