அதிக விபத்துகள் ஏற்படும் 53 இடங்கள் கண்டுபிடிப்பு


அதிக விபத்துகள் ஏற்படும் 53 இடங்கள் கண்டுபிடிப்பு
x

வேலூர் மாவட்டத்தில் அதிக விபத்துகள் ஏற்படும் 53 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அங்கு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டி.ஐ.ஜி. முத்துசாமி தெரிவித்தார்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் அதிக விபத்துகள் ஏற்படும் 53 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அங்கு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டி.ஐ.ஜி. முத்துசாமி தெரிவித்தார்.

டி.ஐ.ஜி. ஆய்வு

வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் விபத்துகளை தடுக்கும் வகையில் புதிதாக பேரிகார்டுகள், சாலை பாதுகாப்பு கூம்புகள் வாங்கப்பட்டுள்ளது. இதனை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆகியோர் பார்வையிட்டனர். தொடர்ந்து காவல் நிலையங்களில் பயன்படுத்தப்படும் ரோந்து இருசக்கர வாகனங்களையும், அதன் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.

அப்போது டி.ஐ.ஜி. முத்துசாமி, சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆகியோர் போலீசாரிடம் வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும், ஒளி விளக்குகள் பழுது ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினர்.

ரூ.30 லட்சத்தில்...

பின்னர் டி.ஐ.ஜி. முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் கடந்த 2021, 2022-ம் ஆண்டுகளில் அதிக விபத்துகள் ஏற்பட்டன. இதையடுத்து காவல்துறை சார்பில் விபத்துகளை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்பேரில் விபத்துகள் நடைபெறாமல் இருக்க ஒவ்வொரு மாதமும் கூட்டம் நடத்தி ஆலோசனை செய்யப்பட்டது. அதன் பின்னர் ஜனவரி மாதம் 95 விபத்துகளும், பிப்ரவரி மாதம் 89 விபத்துகளும், மார்ச் மாதம் 73 விபத்துகளும் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் விபத்துகள் எண்ணிக்கை குறைந்துள்ளதை காண முடிகிறது. ஜனவரி மாதம் 26 பேரும், பிப்ரவரி மாதம் 18 பேரும், மார்ச் மாதம் 16 பேரும் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

விபத்துகள் ஏற்படுவதற்கும், உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுவதற்கும் அதிவேகமாக வாகனங்கள் ஓட்டுவது தான் காரணம் என கண்டறியப்பட்டன. விபத்துகளை தடுக்க சாலை பாதுகாப்பு உபகரணங்கள் தேவை. அதன்படி வேலூர் மாவட்டத்தில் ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சுமார் 485 பேரிகார்டுகளும், சாலை பாதுகாப்பு கூம்புகளும் வாங்கப்பட உள்ளது. இந்த பேரிகார்டுகள் அதிவேகமாக வாகனங்கள் ஓட்டுபவர்களை தடுக்கும் வகையில் ஆங்காங்கே சாலையில் வைக்கப்பட உள்ளது.

53 இடங்கள்

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அறிவுரைகள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வேலூரில் இயங்கி வந்த 5 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் விபத்து ஏற்பட்டால் உதவி செய்யும் பணியை மேற்கொண்டு வந்தனர். தற்போது அவர்களுக்கு கூடுதலாக விபத்துகள் ஏற்படாத வகையில் பணி மேற்கொள்ளவும் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் 53 இடங்கள் விபத்துகள் ஏற்படும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் காவல்துறையும், வி.ஐ.டி.யும் இணைந்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

விபத்துகள் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுவதாக தெரிய வந்துள்ளது. எனவே வேலூர் சரகத்தில் அனைத்து காவலர்களும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் கண்ணில் படும்படியாக சாலையில் நின்று பணியாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் மட்டும் விபத்துகளால் ஏற்படும் மரணம் 16 சதவீதம் குறைந்துள்ளது.

வெளிமாநில குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது. கிராமங்களிலும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story