15-ம் நூற்றாண்டை சேர்ந்த யானை மேல் மன்னன் உலா வரும் சிற்பம் கண்டெடுப்பு
காளையார்கோவில் அருகே 15-ம் நூற்றாண்டை சேர்ந்த யானைமேல் மன்னன் உலா வரும் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.
காளையார்கோவில் அருகே 15-ம் நூற்றாண்டை சேர்ந்த யானைமேல் மன்னன் உலா வரும் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.
ஆய்வு
சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் காளிராஜா, செயலர் நரசிம்மன், கள ஆய்வாளர் சரவணன் மற்றும் ஆசிரியர் முத்துக்குமார் ஆகியோர் காளையார்கோவில் பாண்டியன் கோட்டைப்பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வுக்காக சென்றனர். அப்போது செல்லும் வழியில் யானை மேல் மன்னர் உலா வரும் 15-ம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பத்தை கண்டறிந்தனர்.
இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் காளிராஜா கூறியதாவது:-
காளையார்கோவிலில் வாள் மேல் நடந்த அம்மன் கோவில் முன் அமைந்துள்ள தெப்பக்குளத்தின் கிழக்குப்பகுதியில் பழமையான கற்துண்களும் சிற்பங்களும் 2 இடங்களில் குவியலாக கிடக்கின்றன. குவியிலாகக் கிடக்கும் கற்களை விட்டு அவற்றிலிருந்து தனியாகக் கிடக்கும் கல்லிலே மன்னன் ஒருவன் யானையின் கழுத்தில் அமர்ந்து செல்வதும் அம்மன்னருக்கு பின் பணியாளர் ஒருவர் அமர்ந்து வெண்கொற்றக்குடை பிடித்துச் செல்வதும் சாமரப் பெண்கள் வெண்சாமரம் வீசுவதுமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
15-ம் நூற்றாண்டு
இந்த சிற்பம் 15-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்க வாய்ப்புள்ளது. மேலும் இப்பகுதி அதிட்டானம் மேல் அமைந்த வேதிகையாகவோ அல்லது கபோதகம் கீழ் அமைந்த உத்திரப் பகுதியாகவோ இருக்கலாம்.
யானை மேல் மன்னர் அமர்ந்து செல்லும் அரிய வகை காட்சியிலான 15-ம் நூற்றாண்டு சிற்பம் கிடைத்துள்ளதால் இதை அரசு அருங்காட்சியகத்தில் தேவஸ்தானம் சமஸ்தானம் அனுமதியோடு ஒப்படைக்கும் பணியை சிவகங்கை தொல்நடைக் குழு செய்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.