பிளாஸ்டிக் பைகளில் உணவு பொருட்கள் விற்பனை செய்தால் அபராதம்-அலுவலர்களுக்கு, கலெக்டர் அறிவுறுத்தல்
தர்மபுரி:
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் உணவு பொருட்களை விற்பனை செய்தால் உடனடியாக அபராதம் விதிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் சாந்தி அறிவுறுத்தினார்.
கண்காணிப்பு குழு கூட்டம்
தா்மபுாி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு ஆலோசனை கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பானு சுஜாதா முன்னிலை வகித்தார். உணவு பாதுகாப்பு துறை அலுவலர் நந்தகோபால் வரவேற்றார்.
கூட்டத்தில் தா்மபுரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறையின் செயல்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பேசினர். மேலும் ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்களை அதிகளவு சேகரித்து பயோடீசலாக மாற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அபராதம்
அப்போது கலெக்டர் பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் உணவு பொருட்களை விற்பனை செய்தால் உடனடியாக அபராதம் விதிக்க வேண்டும். இதேபோல் பான்மசாலா, குட்கா விற்பனை மற்றும் தரமற்ற பொருட்கள் விற்பனை ஆகியவற்றுக்கு உடனடி அபராதம் விதிக்கும் வகையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். தா்மபுரி மாவட்டத்தில் அனைத்து ஐஸ் தயாரிக்கும் கம்பெனிகளிலும் ஆய்வு செய்து, உரிமம் வழங்க வேண்டும்.
அசைவ உணவு தயாரிக்கும் அனைத்து உணவகங்கள் மற்றும் ஓட்டல்களில் ஆய்வு செய்து, தரம் இல்லாத இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என கண்காணிக்க வேண்டும். மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அயோடின் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
கூட்டத்தில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவாஸ் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், அரசு கலை கல்லூரி ஊட்டச்சத்து துறை பேராசிரியர்கள், உணவகங்கள்-பேக்கரிகள் சங்கத்தினர், வர்த்தகர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.