போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களுக்கு அபராதம்


போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த  மோட்டார் சைக்கிள்களுக்கு அபராதம்
x

திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பாதுகாப்பாக இருக்கும்

திருவண்ணாமலை நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகின்றது. நகரின் முக்கிய பகுதியான சின்னக்கடை தெரு, தேரடி வீதி, திருவூடல் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்த போதிய இட வசதி இல்லாததால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தங்கள் மோட்டார் சைக்கிள்களை சாலையோரங்களில் நிறுத்தி விட்டு செல்கின்றனர். தேரடி வீதியில் உள்ள ஜோதி பூ மார்க்கெட், காய்கறி மார்க்கெட், கடைகளுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சாலையோரங்களில் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தினால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என்று திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தி விட்டு செல்கின்றனர்.டவுன் போலீஸ் நிலையம் முன்பு குறிப்பிட்ட இடத்தை சுற்றி போலீசார் பேரிகார்டுகள் மூலம் தடுத்து வைத்து உள்ளதால் அங்கு மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தும்போது தென் ஒத்தவாடை தெருவில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை பூ மார்க்கெட்டிற்கு வந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மோட்டார் சைக்கிள்களை டவுன் போலீஸ் நிலையம் முன்பு பாதுகாப்பாக இருக்கும் என்று நிறுத்தி விட்டு சென்றனர்.

வியாபாரிகள் வேதனை

அப்போது டவுன் போலீசார் போலீஸ் நிலையம் எதிரில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து திடீரென அபராதம் விதிக்க தொடங்கினர். மேலும் போலீஸ் நிலையம் முன்பு மோட்டார் சைக்கிள்கள் அணிவகுத்து நிறுத்தப்பட்டு இருந்ததை கண்ட போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் அந்த மோட்டார் சைக்கிள்களை போலீஸ் நிலையத்திற்குள் கொண்டு செல்ல உத்தரவிட்டார்.

மோட்டார் சைக்கிள்களை போலீசார் லாவகமாக தூக்கியபடி போலீஸ் நிலையத்திற்குள் கொண்டு சென்றனர். இதையறிந்த வியாபாரிகள் ஓடி வந்து தங்கள் மோட்டார் சைக்கிள்களை எடுத்தனர். அபராதம் விதித்ததால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் வேதனை அடைந்தனர்.

திருவண்ணாமலை நகரில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு இடவசதி செய்து கொடுக்காமல் ஆளில்லாத வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதும், பறிமுதல் செய்வதும் போன்ற செயல்களில் போலீசார் ஈடுபடுவது வேதனையாக உள்ளது என்றும், பொங்கல் பண்டிகை சமயத்தில் போலீசார் இது போன்று செய்வது மனஉளைச்சலை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


Next Story