பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த 15 கடைகளுக்கு அபராதம்
தஞ்சையில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற 15 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தஞ்சாவூர்;
தமிழகஅரசு சுற்றுப்புற சுகாதாரத்தை பாதுகாக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கும் வகையில் எளிதில் மக்காத, ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எரியும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த முற்றிலும் தடை விதித்துள்ளது. மேலும் இதனை பயன்படுத்தக் கூடாது என விழிப்புணர்வும் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது.தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வது கண்டறிந்தால் முதல் முறை குற்றத்துக்கு ரூ.25 ஆயிரம், 2-ம் முறைக்கு ரூ.50 ஆயிரம், 3-ம் முறைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என அரசிதழிலில் வெளியிடப்பட்டது. இதையடுத்து தஞ்சை மாநகராட்சி பகுதியில் நேற்று கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என திடீர் சோதனை நடத்தினர்.துப்புரவு ஆய்வாளர் ரஞ்சித்குமார் தலைமையிலான குழுவினர் கீழவாசல் மற்றும் அய்யங்கடைத்தெரு பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்த போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தம் 15 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, 500 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.