பழைய குற்றவாளிகளின் கைரேகைகள் சிக்கின
திருவட்டார் நரசிம்மர் கோவிலில் நடந்த உண்டியல் கொள்ளையில் 2 பழைய குற்றவாளிகளின் கைரேகைகள் சிக்கின. தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
திருவட்டார்:
திருவட்டார் நரசிம்மர் கோவிலில் நடந்த உண்டியல் கொள்ளையில் 2 பழைய குற்றவாளிகளின் கைரேகைகள் சிக்கின. தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
நரசிம்மர் கோவில்
திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் அருகில் நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. கேரள பாரம்பரிய முறைப்படி ஓடுகள் வேய்ந்து கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் திருச்சூர் நடுவில் மடத்துக்கு சொந்தமானது ஆகும். திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நரசிம்மர் கோவிலுக்கு வருகை தந்து வழிபாடுகள் செய்து விட்டு செல்வது வழக்கம்.
கேரள மடத்துக்கு சொந்தமான கோவில் என்றாலும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மரப்பெட்டி உண்டியலும், மடத்து சார்பில் குடத்தாலானதும் என 2 உண்டியல்கள் வைக்கப்பட்டன. கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த 2 உண்டியல்களிலும் காணிக்கை செலுத்தி சென்றனர்.
உண்டியல் பணம் கொள்ளை
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை அர்ச்சகர் கோவிலை திறந்து உள்ளே சென்றபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த 2 உண்டியல்கள் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும், அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா உபகரணங்களையும் மர்ம நபர்கள் எடுத்துச் சென்றது தெரியவந்தது.
கைரேகைகள் சிக்கின
பின்னர், இதுகுறித்து கோவில் மேலாளர் ஜோதிஷூ திருவட்டார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் திருவட்டார் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர், சப்-இன்ஸ்பெக்டர் ஞானதாஸ் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர். அப்போது, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களின் 2 கைரேகைகள் சிக்கின.
பழைய குற்றவாளிகள்
பின்னர், கம்ப்யூட்டர் உதவியுடன் ஏற்கனவே குமரி மாவட்டத்தில் திருட்டு சம்பவத்தில் கைதானவர்களின் கைரேகையுடன் ஒத்துப்போகிறதா? என தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது, வெளிமாநிலத்தில் இருந்து குமரி மாவட்டத்தில் தங்கியிருந்து கொள்ளையடித்த சம்பவத்தில் பிடிபட்டு தற்போது வெளியே உள்ள 2 நபர்களின் கைரேகையுடன் ஒத்துப்போனதாக தெரிகிறது.
இதையடுத்து அவர்களின் பழைய குற்ற பின்னணி, தங்கியிருந்த இடங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்களை கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் கொள்ளையர்கள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.