எப்.ஐ.ஆர். நிலையில் உள்ள குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டவருக்கு பாஸ்போர்ட் வழங்க தடை இல்லை
எப்.ஐ.ஆர். நிலையில் உள்ள குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டவருக்கு பாஸ்போர்ட் வழங்க தடை இல்லை ஐகோர்ட்டு உத்தரவு.
சென்னை,
நாகை மாவட்டத்தை சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா. இவர், மலேசியாவில் தொழில் செய்து வருகிறார். அங்கு அவரது பாஸ்போர்ட் தொலைந்து விட்டது. இதுகுறித்து மலேசியா போலீசில் புகார் செய்து, அதை கண்டுபிடிக்க முடியவில்லை என்ற சான்றிதழுடன், புதிய பாஸ்போர்ட் கேட்டு இந்திய தூதரகத்தில் விண்ணப்பம் செய்தார். ஆனால், ஷேக் அப்துல்லா மீது நாகப்பட்டினம் போலீஸ் நிலையத்தில் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது என்று கூறி, அவருக்கு பாஸ்போர்ட் வழங்க இந்திய தூதரக அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மலேசியாவில் இருந்தபடி ஷேக் அப்துல்லா வக்கீல் மூலம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
குற்ற வழக்குகள் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.,) நிலையில் இருந்தால் சம்பந்தப்பட்ட நபருக்கு பாஸ்போர்ட் வழங்க எந்த தடை இல்லை. அந்த வழக்குகள் பாஸ்போர்ட் வழங்க தடையாக இருக்காது. ஒருவேளை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர் வழக்கு நிலுவையில் உள்ள கோர்ட்டின் அனுமதியை பெற வேண்டும். அதுவும் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டியது இருந்தால் மட்டுமே இதுபோன்ற அனுமதியை பெற வேண்டும். ஆனால், இந்த நிபந்தனை வெளிநாட்டில் இருந்து இந்தியா வர பொருந்தாது.
எனவே, இந்த உத்தரவுடன் மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் புதிய பாஸ்போர்ட் கேட்டு மனுதாரர் புதிய மனு கொடுக்க வேண்டும். அதன்படி அவருக்கு தூதரக அதிகாரிகள் உடனடியாக பாஸ்போர்ட் வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.