ஓசூர் அருகே பர்னிச்சர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து-ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்


ஓசூர் அருகே பர்னிச்சர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து-ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்
x
தினத்தந்தி 11 Nov 2022 12:15 AM IST (Updated: 11 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் அருகே பர்னிச்சர் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.

பர்னிச்சர் தொழிற்சாலையில் தீ விபத்து

ஓசூர் அருகே கர்நாடக எல்லை பகுதியான ஆனேக்கல்லை அடுத்த ஜிகினியில் தனியார் பர்னிச்சர் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு மரங்களால் சேர், டேபிள், கட்டில், ஷோபா செட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. தொழிற்சாலையில் 500-க்கும் மேற்பட்டோர் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை தொழிற்சாலையில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. தொடர்ந்து தொழிற்சாலையில் தீ பிடித்து மளமளவென எரிய தொடங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிற்சாலை காவலாளிகள் ஜிகினியில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

ரூ.1 கோடி சேதம்

அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தொழிற்சாலையில் பற்றிய தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்க முயன்றனர். ஆனால் தீ கட்டுக்குள் வராமல் தொடர்ந்து பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இதனால் மற்ற தீயணைப்பு நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, கூடுதல் வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.

தொடர்ந்து 5 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தொழிற்சாலையில் பயங்கரமாக பற்றி எரிந்த தீ முழுமையாக அணைத்து கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால் தீ விபத்தில் தொழிற்சாலையில் இருந்த மரத்தால் செய்யப்பட்ட பொருட்கள், எந்திரங்கள், மரக்கட்டைகள் மற்றும் மூலபொருட்கள் எரிந்து சேதமானது. அவற்றின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

விசாரணை

மேலும் மின்கசிவு காரணமாக தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ஜிகினி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பர்னிச்சர் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story