தனியார் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து


தனியார் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து
x
திருப்பூர்


பல்லடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் அருகில் உள்ள மற்ற கடைகள் தீ விபத்தில் இருந்து தப்பின.

தனியார் நிறுவனம்

பல்லடத்தில் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாலசுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இங்கு பிரபல நகைக்கடையின் கடன் வசூல் சேவை மைய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மாதாந்திர நகை சீட்டு மற்றும் நகை கடன் தொகை வசூல் செய்யப்பட்டு வருகிறது.

நேற்று வழக்கம் போல அலுவலகம் திறக்கப்பட்டு, ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர். திடீரென அலுவலகத்தின் மின்சார பெட்டியில் இருந்து புகை வந்தது. உடனே அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் வெளியில் வந்தனர்.

இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் மேலாளர் பிரகாஷ் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் தீயணைப்பு துறையினர் சுமார் அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர்கள், மேஜை, நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதம் ஆனது.

மின் கசிவால் தீ

தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததால் மற்ற கடைகளுக்கு தீ பரவாமல் தவிர்க்கப்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

இந்த தீ விபத்து காரணமாக கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story