பழைய இரும்பு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம்
போயம்பாளையம் அருகே பழைய இரும்பு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்து நாசமாகியது.
போயம்பாளையம் அருகே பழைய இரும்பு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்து நாசமாகியது.
தீப்பிடித்தது
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைசேர்ந்தவர் ராமர். இவர் திருப்பூர் பி.என்.ரோடு மும்மூர்த்திநகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் ராமர் அந்த பகுதியில் பழைய காகித மற்றும் இரும்பு பொருட்கள் வாங்கி, விற்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான குடோன் போயம்பாளையத்தை அடுத்த பழனிச்சாமிநகர் 2-வது வீதியில் உள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை 6.30 மணிக்கு திடீரென அந்த குடோனில் இருந்து கரும்புகை வெளியானது. சிறிது நேரத்தில் தீ மளமளவென எரியத் தொடங்கியது. இதை கண்ட அக்கம்பக்கத்தினர் திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கு 2 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அங்கு காகிதம் உள்ளிட்ட பொருட்கள் அடர்த்தியாக இருந்ததால் தீ பற்றி விட்டு எரியத் தொடங்கியது.
பொருட்கள் எரிந்து சேதம்
இதனால் தீயை அணைப்பதில் சுணக்கம் ஏற்பட்டது. தீயணைப்பு வாகனங்களில் இருந்த தண்ணீர் முடிந்து விட்டதால் லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, பக்கத்து வீட்டு மாடியில் இருந்தும் தீயை அணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. பாதி அளவு தீ அணைக்கப்பட்ட நிலையில் பொருட்கள் அடிப்பகுதியில் இருந்து மீண்டும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனால் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு, அங்கிருந்த பொருட்களும், மூட்டைகளும் வெளியே எடுக்கப்பட்டன.
இதன் பின்னரே தீ ஓரளவு கட்டுக்குள் வந்தது. 4 மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த விபத்தில் அந்த குடோனில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகியது. மேலும் குடோனை ஒட்டி இருபுறமும் இருந்த வீடுகளிலும் லேசான சேதம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது.