கரும்பு தோட்டத்தில் திடீர் தீ
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள எச்.புதுப்பட்டியை சேர்ந்தவர் நவீன் (வயது 35). விவசாயி. இவர் தனது நிலத்தில் கரும்பு பயிரிட்டு உள்ளார். தற்போது கரும்பு நன்கு விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. நேற்று மதியம் கரும்பு தோட்டத்துக்கு மேல் சென்ற மின்சார கம்பிகள் உராய்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதில் இருந்து தீப்பொறி கிளம்பி, தோட்டத்தில் விழுந்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த கரும்புகள் தீயில் எரிய தொடங்கின. இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். அதற்குள் 2 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கரும்புகள் தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து ஏ.பள்ளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரும்பு தோட்டத்தில் திடீரென தீப்பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.